வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (16/06/2018)

கடைசி தொடர்பு:15:12 (16/06/2018)

`குழந்தையுடன் செல்ல கேரளத் தம்பதிக்கு அனுமதி மறுப்பு' - விமான கேப்டனின் மனித நேயமற்ற செயல்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் செல்ல கேரளத் தம்பதிக்கு விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த தம்பதியினர், ஜார்ஜ் மற்றும் திவ்யா. வேலை காரணமாக சிங்கப்பூரில் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தை ஒரு சிறப்புக் குழந்தையாகும். அதாவது, தசைநார் பிரச்னையால் ஒரு வயது குழந்தைக்கு உடைய எடையான 8.5 கிலோ மட்டுமே அந்தக் சிறுமி உள்ளார். இதற்கிடையே, விடுமுறை காரணமாக 3 நாள் பயணமாக தாய்லாந்தில் உள்ள புகெட் நகருக்கு செல்லத் தீர்மானித்து, அதற்காக ஸ்கூட் ஏர்லைன்சில் 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று புகெட் கிளம்பியபோது, விமானத்தில் உடல்நலம் இல்லாத சிறுமி தனியாக இருக்கையில் அமர முடியாது என்பதால் அவரைத் தன் மடியில் அமர்த்திப் பிடித்துள்ளார் திவ்யா. 

ஆனால், விமான பணிப்பெண்கள் அதற்கு அனுமதி மறுக்கவே, குழந்தையின் பாதுகாப்புக்கான இருக்கை பெல்ட் கேட்டனர். ஆனால், பாதுகாப்பு பெல்ட் வழங்கப்படவில்லை. இதுகுறித்து விமான கேப்டனிடம் புகார் தெரிவிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் தம்பதியைச் சந்திக்க மறுத்துள்ளார். பின்னர், சுமார் 1 மணி நேரம் கழித்தே விமான கேப்டன் சந்தித்துள்ளார். அப்போது, குழந்தையை அதன் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும். இல்லையென்றால், விமானத்தை விட்டு இறங்க வேண்டும் என்று கேப்டன் கூறியுள்ளார். இதை அவர்கள் ஏற்கவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின்னர், குழந்தையைத் தாய் அரவணைப்பில் செல்ல சம்மதித்தனர். இந்த விவகாரம் குறித்து திவ்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில்,  ``எனது மகளால் தனியாக உட்கார முடியாது. அப்படிச் செய்தால், அவள் கீழே விழுந்துவிடுவாள். பலமுறை அவளை விமானத்தில் கூட்டிச் சென்றுள்ளோம். அப்போதெல்லாம் எனது, மடியில் உட்காரவைத்துத்தான் சென்றுள்ளேன். எந்த நிறுவனமும் எங்களுக்கு அனுமதி மறுத்ததில்லை. மேலும், அவளுக்கான பாதுகாப்பு பெல்ட்டும் தருவார்கள். ஆனால், ஸ்கூட் விமானத்தில் இவ்வாறு நடந்துள்ளது. அவளை இருக்கையில் உட்காரவைத்தால்தான் விமானத்தை இயக்க முடியும் எனக் கூறிவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, ஸ்கூட் ஏர்லைன்ஸுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க