வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (17/06/2018)

கடைசி தொடர்பு:18:33 (17/06/2018)

6 வாரத்தில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 2000 குழந்தைகள்! பதறும் அமெரிக்க எல்லை

கிட்டத்தட்ட 2000 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க எல்லையில் எல்லைப்பாதுக்காப்பு படையினர் பிரித்துள்ளனர். அதற்கு காரணமாக இவர்கள் கூறுவது இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்தவர்கள்

6 வாரத்தில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 2000 குழந்தைகள்!  பதறும் அமெரிக்க எல்லை

கடந்த 16 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பிரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதைவிட மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக கடந்த 6 வாரங்களில் மட்டும் 2000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள செய்தி புலம் பெயர் அமெரிக்கர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் குடியேறிய சமூகத்தை அந்த இடத்தில் இருந்து விரட்டுவது என்பது சில இடங்களில் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு சமீபத்திய சாட்சி அமெரிக்க எல்லையில் நடக்கும் நிகழ்வுகள் தான். கிட்டத்தட்ட 2000 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் பிரித்துள்ளனர். அதற்கு காரணமாக இவர்கள் கூறுவது 'இந்த மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்தவர்கள். அதனால் தான் இவர்களை வெளியேற சொல்கிறோம்' என்கிறார்கள்.

அமெரிக்க எல்லை

ட்ரம்பின் முற்றிலும் சகிப்புத்தன்மையில்லாத கொள்கைதான் இந்த வெளியேற்றங்களுக்கு வழிவகை செய்கிறது என்று புலம்பெயர் சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் ட்ரம்ப் அரசாங்கத்தின் நிலைப்பாடு.

குழந்தைகளுக்கு உயர்தர வசதிகள் செய்து கொடுக்கப்படும், கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறந்த முறையில் ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியுள்ளனர். நீதிமன்றமோ இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான குடியேற்றங்களுக்கு சில சமரசங்கள் செய்வதற்கான வழிவகைகளை குடும்பங்களின் நலன் கருதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு இதற்கு ஒரு சட்டமசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்து முடிவெடுக்கப்படும். ஆனால் அந்த முடிவு சமரசமானதாக இருக்காது என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது என்பது கடினமான விஷயம் தான். ஆனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அதுமாதிரியான நேரத்தில் அவர்களிடமிருந்து பிரியும் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர்களை பிரித்து கண்காணிப்பில் சிறப்பாக வளர்க்கிறோம் என்றும், பால் குடி மறவா குழந்தைகளை நாங்கள் பிரிப்பதில்லை என்றும் நியாயம் பேசுகிறது அமெரிக்கா. 

அமெரிக்க எல்லை

காங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் ஏழு வயது மகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையின் தாய் இவர்தான் என்பதற்கான ஆவணங்களை, அரசு கேட்கிறது. அந்த ஆவணங்கள் பிரிக்கப்பட்ட யாருடைய கைகளிலும் இல்லை என்பதுதான் சிக்கல். மரபணுச் சோதனை செய்து உறவை நிரூபித்துக்காட்ட முடியுமென்றாலும் அதற்கு மாதக் கணக்கில் காலம் எடுத்துக்கொள்கிறது அரசு. இதெல்லாம் "குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்த நடவடிக்கைகள், அமெரிக்க எல்லைக்குள் மற்ற நாட்டவர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே'' என்று இதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். 

25 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் சுவரில் தான் ஜெயில்கள் அமையப்போவதாகவும். அங்கு இவர்கள் அடைக்கப்படுவார்கள் என்று பெற்றோர்களை கைது செய்கிறது அமெரிக்கா. சுவர் எழுப்பி இருநாடுகளை பிரிப்பது, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது என அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்க புலம்பெயர்ந்தவர்கள் கண்டித்து வந்தாலும் சட்டங்களை அரசு வலுவாக்கிக் கொண்டே போகிறது. உலக நாடுகளின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் ஐ.நா இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? வழக்கம் போல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத்தான் போகிறது என்று புலம்பெயர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஐ.நா தலையிட்டு சொல்லுவதை அமெரிக்கா விரும்புமா என்பது தான் இங்கு நிலவும் இக்கட்டான சூழல். 


டிரெண்டிங் @ விகடன்