2 நிமிடத்துக்கு ஒருவர் அகதியாக வெளியேறுகிறார்கள் - ஐ.நா அதிர்ச்சி தகவல்

கடந்த வருடம் மட்டும் 68 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா கூறியுள்ளது.

ஐ.நா

சிரியா, மியான்மர் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர், கலவரம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற காரணங்களாலும் சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுவதாலும் கடந்த வருடம் மட்டும் சுமார் 68 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களில் சொந்த வீடு, நாட்டைத் துறந்து அகதிகளாக வெளியேறி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் கடந்த  வருடத்துக்கான அகதிகள் பற்றிய விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அகதிகளாகும் மக்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டை விட 2017-ம் வருடம் அதிகமாகியுள்ளதாகவும் குறிப்பாக, எப்போதும் இல்லாமல் காங்கோ, தென் சூடான், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,  ஒவ்வோர் இரண்டு நிமிடத்துக்கும் ஒருவர் அகதியாக வெளியேறுவதாகவும் ஒவ்வொரு 110 பேருக்கும் ஒருவர் அகதியாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை ஐந்து நாடுகளிலிருந்து மட்டும் அதிகமானோர் வெளியேறியுள்ளதாகவும் அவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிரியா - 6.3 மில்லியன், ஆப்கானிஸ்தான் - 2.6 மில்லியன், தென் சூடான் - 2.4 மில்லியன், மியான்மர் - 1.2  மில்லியன், சோமாலியா - 9,86,400 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். அப்படி வெளியேறுபவர்களுக்கு அடைக்கலம் தரும் நாடுகளில் துருக்கி முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அந்நாட்டு 3.5 மில்லியன் மக்களைத் தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!