`யாதும் ஊரே யாவரும் கேளிர்' - ரஷ்யாவில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறை

போட்டி முடிந்ததும் மைதானத்தைச் சுத்தப்படுத்திய ஜப்பான் ரசிகர்கள்

`யாதும் ஊரே யாவரும் கேளிர்' - ரஷ்யாவில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறை

காலம் தவறாமைக்கு ஜப்பான் மக்களைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். சமீபத்தில் 30 விநாடிகள் முன்னதாக ரயில் புறப்பட்டதற்காக அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியது. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனமான இருப்பதால்தான் ஜப்பான், உலகின் பணக்கார நாடாக வளர்ந்துள்ளது. ரஷ்யாவில் தற்போது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. 32 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் அங்கே குவிந்திருக்கின்றனர். ஆனால், எந்நாட்டு ரசிகர்களுக்கும் வராத அக்கறை ஜப்பான் ரசிகர்களிடம் பார்க்க முடிகிறது. கால்பந்துப் போட்டி முடிந்ததும் ஸ்டேடியத்தைச் சுத்தப்படுத்திய பின்னரே ஜப்பான் ரசிகர்கள் வெளியேறுகின்றனர். 

ஜப்பான் ரசிகர்கள்

Photo credits : The Guardian

ஷாரான்ஸ்க் நகரில் உள்ள மார்டோவியா எரீனா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி கொலம்பிய அணியை 2-1 வீழ்த்தியது. போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ஜப்பான் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். போட்டியை ரசிக்கும்போது, குடிநீர் பாட்டில்கள், குளிர்பான டின்கள், நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டுவிட்டு மைதானத்தில் ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றுவிடுவது ரசிகர்களின் வழக்கம். போட்டி முடிந்ததும் குப்பையும் கூளமுமாகக் கிடந்த மைதானத்தை ஜப்பான் ரசிகர்கள் சுத்தப்படுத்திவிட்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

குழந்தைப் பருவத்திலிருந்தே பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்த அந்நாட்டுக் குழந்தைகள் பழக்கப்படுத்துகின்றனர். பிரேசில் உலகக் கோப்பை போட்டியிலும் ஜப்பானியர்கள் மைதானத்தைச் சுத்தப்படுத்தினர். 'ஜப்பானியர்களால் மட்டுமே உலகத்தையே தங்கள் நாடாக கருத முடியும்... உலகின் சிறந்த ரசிகர்கள் ஜப்பானியர்கள்' என்று பாராட்டு குவிந்து வருகிறது. போலந்து அணியைத் தோற்கடித்த செனகல் நாட்டு ரசிகர்களும் மைதானத்தைச் சுத்தப்படுத்தி ரஷ்ய மக்களின் நன்மதிப்பைப் பெற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!