8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்!

செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள நாடு முழுவதும் சுமார் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள்

பத்திரிகையாளர்கள் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளவும் பொய் செய்திகளைப் பதிவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும் கூகுள் இந்தியா பயிற்சி நிறுவனம் சார்பில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நேற்று கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுள் நியூஸ் ஐ.ஐ.டி.என் திட்டத்தின் கீழ், கூகுள் பயிற்சிக் குழு சார்பில் முதலில் 200 பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு செய்தியின் உண்மைத் தன்மை, அது எங்கிருந்து பெறப்பட்டது, ஒரு செய்தி எந்த அளவுக்கு உண்மை, அதில் கூறப்பட்டுள்ள தகவல் ஏற்றுக்கொள்ளக்கூடியதா போன்ற அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. பின்னர், அவர்கள் அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, வங்கம், மராத்தி ஆகிய மொழிகளில் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் தவறான மற்றும் பொய் செய்திகளைப் பதிவிட்டு பிரச்னையில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!