500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம்..! ஒபாமா பெயரை சூட்டிய ஆய்வாளர்கள் | மFossil organism named with former American president Obama...

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (21/06/2018)

கடைசி தொடர்பு:03:19 (21/06/2018)

500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம்..! ஒபாமா பெயரை சூட்டிய ஆய்வாளர்கள்

தொல்லெச்சங்களைத் தொல்லுயிரிப் பேராசிரியர்கள் "ஆலிஸின் உணவகம்" என்று குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம், ஆர்லோ குத்தீரோ என்பவரின் பாடலில் வரும் ஆலிஸ்

ஆஸ்திரேலியாவின் தெற்கு மலைத்தொடர்களில் அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்துவருகின்றனர். தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் மேரி டோஸின் தலைமையில் நடந்துவரும் ஆய்வில் நேற்று (19-06-2018) 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் உயிரினத்தின் தொல்லெச்சத்தைக் கண்டுபிடித்தனர். அறிவியலின்  மீது அதிகமான ஈடுபாடு கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் பிரதமர் பாரக் ஒபாமா அவர்களின் பெயரை அந்த உயிரினத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர்.

ஒபாமா

தொல்லெச்சங்களைத் தொல்லுயிரிப் பேராசிரியர்கள் "ஆலிஸின் உணவகம்" என்று குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம், ஆர்லோ குத்தீரோ என்பவரின் பாடலில் வரும் ஆலிஸ் என்ற கதாபாத்திரத்தின் உணவகத்தில் கிடைக்காத உணவு வகைகளே இல்லை. அதைப்போலவே தொல்லெச்சங்களில் கிடைக்காத தகவல்களே இல்லை என்பதால் ஆய்வாளர்கள் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள தொல்லெச்சம் 2 சென்டிமீட்டர் அளவே இருந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஓர் உயிரினத்தினுடையது.

ஒபாமஸ் கொரனாடஸ் (Obamas Coronatus) என்ற பெயர்கொண்ட அந்த உயிரினம் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தது. உடலில் வளைந்து நெளிந்த வரிகளைக் கொண்டது. அதிகமாக நகர்க்கூடிய பழக்கமில்லாத ஒபாமஸ் கடல் தரையிலிருக்கும் புற்களோடு ஒட்டிக்கொண்டு வாழக்கூடியது. வேறு உயிரினங்களின் மூலத்திலிருந்து பல்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஆனால், இந்த உயிரினம் ஏதோ ஓர் உயிரிக்கான மூல உயிரினமாக இருந்திருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். இதேபோல் சில நாட்களுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு உயிரினத்தின் தொல்லெச்சத்திற்கு சூழலியல் விஞ்ஞானி டேவிட் அட்டன்பரோஹ் அவர்களின் பெயர் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த உயிரினத்தின் பெயர், அட்டன்பொரைட்ஸ் ஜானே (Attenborites janeae).