சிங்கப்பூரில் பிளாஸ்டிக் ஸ்டிரா பயன்பாட்டை நிறுத்திய கே.எஃப்.சி நிறுவனம்..! | KFC stopped the usage of plastic straws in Singapore

வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (21/06/2018)

கடைசி தொடர்பு:10:17 (21/06/2018)

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் ஸ்டிரா பயன்பாட்டை நிறுத்திய கே.எஃப்.சி நிறுவனம்..!

இந்த அறிவிப்பின்படி இனிவரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் மூடிகள் வழங்கப்படமாட்டாது. உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டுமே பொருந்தும். வெளியே வாங்கிச் செல்பவர்களுக்கு

சிங்கப்பூரில் இருக்கும் கே.எஃப்.சி நிறுவனம் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் மூடிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. நேற்று (June 20,2018) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி இன்று முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள கே.எஃப்.சி நிறுவனம், சிங்கப்பூரில் மொத்தமுள்ள 84 கிளைகளிலும் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதன்மூலம் நாளொன்றுக்கு சிங்கப்பூரில் உருவாகும் 17.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் வாய்ப்புள்ளது. அத்தோடு வருங்காலத்தில் மக்கும் தன்மைகொண்ட பொருள்களைப் பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்த முயற்சி செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கே.எஃப்.சி

இந்த அறிவிப்பின்படி இனிவரும் நாள்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் மூடிகள் வழங்கப்படமாட்டாது. உணவகத்திலேயே சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டுமே பொருந்தும். வெளியே வாங்கிச் செல்பவர்களுக்கு மூடிகளில் மட்டும் விதிவிலக்கு உண்டு. ஆனால், உறிஞ்சு குழாய்கள் யாருக்குமே வழங்கப்படாது. 

``பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதில் எங்கள் பங்கைக் குறைப்பதில் எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சிங்கப்பூரின் முதல் அதிவிரைவு உணவகமாக இந்த முயற்சியில் முன்நின்று அனைவருக்கும் உதாரணமாக செயல்படுவோம்" என்று கே.எஃப்.சி நிறுவன மேலாளர் லைனெட் லீ தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழலின் மீது அதிகமான அக்கறைக் கொண்டுள்ள சிங்கப்பூர்வாசிகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். ``இதை நாங்கள்  எதிர்பார்க்கவில்லை. இது நிச்சயம் பாராட்டவேண்டிய சிறந்த முடிவுதான். உறிஞ்சுகுழல் மட்டுமின்றி மூடிகளை தவிர்த்துள்ளது வரவேற்கத்தக்கது' என்று சிங்கப்பூர் சூழலியல் அமைப்பின் இளைஞரணி உறுப்பினர் பமீலா லோ தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக்

சென்ற ஆண்டு, இதே நிறுவனம் உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பாக்கிங் முறையைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதற்கும் முன்பாக உணவுகளை விநியோகிக்க பேப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தவதை நிறுத்திவிட்டு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்த தொடங்கின. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களில் குறிப்பிடக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கர்கள் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களைக் கொட்டுகின்றனர். இவற்றைத் தவிர்த்து சுற்றுச்சூழலோடு இயைந்து வாழப் பழகுவது நிச்சயம் வரவேற்கத்தக்கதே.