'பசியால் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!’ - ஐ.நா ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது ஐ.நா ஆய்வு அறிக்கையின்மூலம் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பசி

'ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018' என்ற தலைப்பில், கடந்த 20-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ' 38 மில்லியன் மக்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 777 மில்லியனாக இருந்தது. ஆனால், 2016-ம் ஆண்டில் 815 மில்லியனாக அதிகரித்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தவித்துவரும் மக்களின் எண்ணிக்கை, ஆண்டு அறிக்கையின்படி குறைய வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாக அதிகரித்துள்ளது' எனக் கவலைப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.  

இந்நிலை ஏற்படுவதற்கு, பல்வேறு நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றங்கள் போன்றவை காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போர்களால், சொந்த நாட்டை விட்டு பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இது மிகவும் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா சபை, ' இன்னும் 12 ஆண்டுகளில் இவற்றைச் சரிசெய்ய வேண்டும். அதாவது, வரும் 2030-ம் ஆண்டுக்குள், சம்பந்தப்பட்ட நாடுகள் இதற்கான தீர்வைக் காண முன்வர வேண்டும்' என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!