வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (22/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (22/06/2018)

`அங்கே எல்லையில் குழந்தைகள்!’ - போராட்டத்துக்குப் பின் கொள்கையை மாற்றிய ட்ரம்ப்

`அங்கே எல்லையில் குழந்தைகள்!’ - போராட்டத்துக்குப் பின் கொள்கையை மாற்றிய ட்ரம்ப்

``குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் சகிப்புத் தன்மையற்ற நடவடிக்கைக்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, குடும்பங்களை இனி பிரிக்க மாட்டேன்'' எனச் செயலாக்க ஆணையில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் கொத்துக்கொத்தாகக் குழந்தைகளை அவரவர் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க அரசு பிரித்துவருகிறது. மேலும், `அத்துமீறிச் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்' என்று கூறி ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சிறையில் அடைத்திருக்கிறது. இதுதவிர, அத்துமீறி நுழைபவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைக்குக் குடியுரிமை இருக்கிறதாம். ஆனால், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அந்த நாட்டில் இருக்க உரிமை இல்லையாம். கடந்த 6 வாரங்களில் மட்டும் 2,000 குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்திருக்கிறது, அமெரிக்க அரசு. ட்ரம்ப்பின் இந்தச் சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்கு உலகம் முழுவதும் அதிக அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கையை அவரின் மனைவியான மெலனியா ட்ரம்ப்பே கடுமையாக விமர்சித்திருந்தார்.

Trump

இதைத் தொடர்ந்து  கடந்த 20-ம் தேதி ட்ரம்ப், குடும்பங்களைப் பிரிக்கும் இந்த நடவடிக்கையை நிறுத்தும் செயலாக்க ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதுதொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் உள்துறைப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்ட்ஜென் நீல்சன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ``இதை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலாக்க ஆணையாகக் கருதுகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தாலும், எங்களின் எல்லைகள் மிக வலிமையான தாகவும் சக்தி வாய்ந்ததாகவும் முன்பைவிடப் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்போம். குடும்பத்திலிருந்து குழந்தைகளைப் பிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை" என்றார்.

ட்ரம்ப் கையெழுத்திட்ட அந்தச் செயலாக்க ஆணையில், `அமெரிக்க எல்லையை மீறுவோர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் கடும் நடவடிக்கை தொடரும்' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆணை, அரசாங்க அதிகாரிகளுக்குக் கீழ்க்கண்டவற்றை வரையறை செய்கிறது. ``சட்டத்துக்குப் புறம்பாக எல்லையை மீறுபவர்கள்மீது குற்றவியல் வழக்கு போடும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைத் தொடர வேண்டும். அதில், எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பெற்றோர்களையும் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்து பாதுகாவலில் வைப்பதற்குப் பதில், வழக்கு முடியும்வரை அவர்களை ஒன்றாகவே பாதுகாவலில் வைக்க வேண்டும்'' என்று அதில் வரையறை செய்கிறது. 

பெற்றோர்களை பிரிந்த பிள்ளைகள்

இந்த ஆணையை ட்ரம்ப் கையெழுத்திட்டதன் விளைவாக 1997-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, 'ஃப்ளோர்ஸ்' என்ற தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஃப்ளோர்ஸ் தீர்மானத்தின்படி குடியேறிய குழந்தைகளை, 20 நாள்களுக்கு மேல் பாதுகாவலில் வைத்திருக்கக் கூடாது. ஆனால், தற்போது கையெழுத்திடப்பட்ட ஆணையின்படி, வழக்கு முடியும்வரை குழந்தைகளைப் பெற்றோர்கள் தன்னுடனே வைத்துக்கொள்ளலாம் என்கிறது. அதனால், 1997-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஃப்ளோர்ஸ் தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர அட்டர்னி ஜெனரல் ஜெஃப்புக்கு  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

``தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர முடியாது'' என நீதிமன்றம் கூறுமாயின், ``செயலாக்க ஆணைமீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்'' என்கின்றனர் குடியேறிய மக்களை ஆதரிக்கும் சமூக ஆர்வலர்கள்.         

குழந்தைகளையும் சேர்த்து பெற்றோர்களுடன் பாதுகாவலில் வைக்கும் ட்ரம்பின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்,  `அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர் சங்கத்தின் இணை இயக்குநர்' கேட் வொய்க். இதுகுறித்துப் பேசிய உள்துறை பாதுகாப்புச் செயலாளர் க்றிஸ்ட்ஜென் நீல்சன் என்பவர் கூறுகையில், ``இந்தப் பிரச்னை நாடாளுமன்றத்தாலும் நீதிமன்றத்தாலும் உருவெடுத்த ஒன்று. இதை நாடாளுமன்றம்தான் சீர் செய்ய முடியும். அதுவரை அமெரிக்காவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்கும்  சட்டத்திட்டங்களை நாங்கள் பிரயோகிப்போம்" என்றார்.    

ட்ரம்ப் ஆணை

இந்தச் செயலாக்க ஆணையில் கையெழுத்திட்ட பின்பு பேசிய ட்ரம்ப்,  "எல்லையில் குடும்பங்கள் பிரிக்கப்படுகிறது என்பதை ஒரு பிரசாரப் பொருளாக எடுத்து என்னுடைய வெற்றிகளையும் எதிர்க்கட்சியின் தோல்விகளையும் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்" என்றார். ஆனால், இவர் மட்டும் இதைக் கூறவில்லை. ட்ரம்பின் மருமகளான லாரா ட்ரம்ப், "ட்ரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் சந்திப்பைத் திசைதிருப்பவே 'டெமோகிராட்ஸ்' கட்சி இந்தப் பிரச்னையைக் கையில் எடுக்கிறது. எங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்து சட்டங்களை மீறும் மக்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் இந்தச் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைக்குக் கலவையான விமர்சனங்கள் வந்துசேர்கின்றன. ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான ஜாக் நைலன்ட் என்பவரே, ``அரசு செய்வது தவறு'' என்று கூறியுள்ளார். மேலும் அவர், ``இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது இதற்குத் தீர்வில்லை. நான் எனது 5 வயதில் என் குடும்பத்தைவிட்டுப் பிரிந்தேன். எனது இளமைக்காலம் முழுவதும் விடுதியிலேயேதான் கழித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு என்றுதான் தீர்வு கிடைக்குமோ?


டிரெண்டிங் @ விகடன்