குகைக்குள் ஆசிரியருடன் சென்ற 12 சிறுவர்கள்... தேடுதல் வேட்டையிலும் சிக்காத மர்மம்

தாய்லாந்தில் உள்ள ஒரு குகைக்குள், பள்ளிக் கால்பந்து அணியின் சிறுவர்கள் மாட்டிக்கொண்டனர். 2 நாள்களாகத் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது.

குகை

Photo Credits : Facebook/ Cathay Mee 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் அருகே, சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங்-குன்னம் நங் என்ற குகைக்கு, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கால்பந்து அணி  சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது உடற்பயிற்சி ஆசிரியர் என 13 பேர் சென்றுள்ளனர். அவர்கள் உள்ளே சென்ற பிறகு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட  வெள்ளத்தில், அனைவரும் குகையினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

சிறுவர்கள் அனைவருக்கும் 13 முதல் 16 வயதுடையவர்கள் என்றும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு 20 வயது இருக்கும் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மேலும், அந்த குகையின் வெளியே ஒரு மோட்டார் சைக்கிள், 11 மிதிவண்டிகள், கால்பந்து விளையாடும்போது அணியும் ஷூ, சில விளையாட்டு உபகரணங்களும்  இருந்ததாகக் கூறப்படுகிறது.  உடற்பயிற்சி ஆசிரியரும், ஒரு சிறுவனும் குகையினுள் சென்றதை அப்பகுதியில் இருந்த ஒருவர் நேரில் பார்த்துள்ளார். ஆனால், உள்ளே சிறுவர்கள் இருப்பதற்கான எந்த தடையமும் துப்பும் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு நாள்களாகத் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  

குகை

இந்நிலையில், இன்று காலை அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து  வீரர்கள் வெளியிட்டுள்ள முகநூல்  பதிவில், ‘நாங்கள் குகையினுள் 5 மீட்டர் ஆழம் வரை உள்ளே சென்றோம். அங்கு ஒரு மூடிய அறை மட்டுமே தென்பட்டது. ஆனால், சிறுவர்கள் பற்றிய எந்த தகவலும்  கிடைக்கவில்லை’எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்துப் பேசிய கடற்படை அதிகாரி, ‘இரண்டு நாள்களாக சிறுவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.  அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், குகையின் வாயிலில் தொடர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ‘எங்கள் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள்  எனத் தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு எதுவும் ஆகாது. அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்’ என்று சிறுவர்களின் உறவினர்கள்  தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!