வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (27/06/2018)

கடைசி தொடர்பு:19:03 (27/06/2018)

`இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்!' - உலக நாடுகளை மிரட்டும் அமெரிக்கா

இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப்

சமீபத்தில் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் இரானிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் பொருளான கச்சா எண்ணெய்யை இனி எந்த நாடும் வாங்கக் கூடாது என அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இராக், சவுதி அரேபியாவை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய நாடு இரான். இதனால் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை வரும் நவம்பர் மாதத்துக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், இதற்கு ஆதரவு அளிக்காத நாடுகள்மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த அறிவிப்புக்கான காரணமும் விளக்கமும் தற்போது கூற முடியாது என்றும் இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இரான் அதிபர் ஹசன் ரவுகானி, “அமெரிக்காவின் அழுத்தத்துக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும் ஒருநாளும் தவற மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.