`சவுதி ஓட்டுநர் உரிமம்' - இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். இதன்மூலம், சவுதியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

சமீபத்தில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றுக்கொண்டார், மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான். இளவரசராகப் பதவியேற்ற பின் சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதன்படி, சமீபத்தில் பெண்களும் கார் ஓட்டலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, பெண்கள் பலரும் கார் ஓட்ட ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால், கார் ஷோரூம்களிலும் பயிற்சி அலுவலகங்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சரம்மா தாமஸ் என்கிற சோமி ஜிஜி என்ற பெண்தான், அந்த உரிமத்தைப் பெற்றுள்ளார்.

சவுதி அரேபியாவின் ராணுவ மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவரும் சரம்மா தாமஸ், ஏற்கெனவே இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்ட பிறகு, முறையான பயிற்சியுடன் அந்நாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். இதன்மூலம், சவுதியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!