ஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து, டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ் இருக்கை

கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக டொரான்டோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று, கனடா தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இதை நடத்தியது பாராட்டுக்குரியது. மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்து, நன்கொடை கொடுத்து விழாவைத் தொடக்கிவைத்தனர். 

இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன்.  நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார், முனைவர் ஆறுமுகம்.  கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.  

கனடா தேசிய கீதத்தை `செந்தூரா’ பாடல்  புகழ்  லக்‌ஷ்மி பாட, அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தைப் பாடினார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனமாடினர். கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி, தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ்ப் பற்றாளர்கள், மேடையிலே தங்கள் நன்கொடைகளை  பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டியிடம் அளித்தனர். 

ஏறக்குறைய 6,00,000 கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 3.12 கோடி) சேர்ந்ததை அமைப்பாளர்களே எதிர்பார்க்கவில்லை. பல்கலைக்கழகத்தின் உப தலைவர் புரூஸ் கிட்,``ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 6,00,000 கனடா டாலர்கள் திரட்டியது, கனடா வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை’’ என்றார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி, அவர்களின்  எழுச்சியை நிரூபித்தது. தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!