விவசாய உற்பத்தியில் டாப் 5 நாடுகள்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

இந்நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு நாடும் விவசாயத்தை முனைப்புடன் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

விவசாய உற்பத்தியில் டாப் 5 நாடுகள்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

எந்தவொரு நாட்டுக்கும் விவசாயம் என்பது மிகவும் முக்கியமான தொழில். ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முதுகெலும்பு விவசாயம் மட்டும்தான். அவ்வாறு உலகில் இந்தியா உட்பட அதிகம் விவசாயம் செய்யும், உள்நாட்டு உற்பத்தியில் அதிகமான பங்களிப்பை அளிக்கும் ஐந்து நாடுகள் பற்றிப் பார்க்கலாம். பட்டியலில் காட்டப்பட்டுள்ள நாடுகள் ஜி.டி.பி வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

1. சீனா

 சீனாவில் சுமார் 136 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 95 லட்சம் ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. அங்குள்ள நிலத்தில் 54.8 சதவிகிதம் நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்களில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் பேர் நேரடி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். சீனாவின் வேறுபட்ட காலநிலைகளின் காரணமாக இங்குப் பல்வேறு பயிர்கள் விளைகின்றன. கோதுமை, திணை, அரிசி, தானியங்கள், பால்பொருள்கள், பருத்தி, தேயிலை, கரும்பு ஆகிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பொருள்களில் 20 சதவிகிதம் பொருள்களானது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவேதான், சீனா உலகின் பணக்கார விவசாய நாடு என அழைக்கப்படுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 68 லட்சம் கோடி ரூபாய் விவசாயம் மூலமாகவே ஈட்டப்படுகின்றன. 

சீனா அடுத்தது இந்தியா

 Photo - CNN


2. இந்தியா

ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தியா 32 லட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது. இங்குச் சுமார் 126 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி, `2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 50 சதவிகித மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய மக்களில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 சதவிகிதம் வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. 2013-14 -ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17-ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 சதவிகிதம் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. மேலும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது. 

இந்தியா

3. அமெரிக்கா

அமெரிக்க மக்கள் தொகை சுமார் 31 கோடி. இங்குள்ள மொத்த நிலப்பரப்பில் 44 சதவிகித நிலமானது விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாக உலக வங்கி சொல்லியிருந்தது. விவசாய உற்பத்தியில் உற்பத்தித்திறன் அதிகமாகக் கொண்ட நாடுதான் அமெரிக்கா. அதாவது, ஒவ்வொரு சராசரி விவசாயியும், 155 அமெரிக்கர்களுக்கு உணவளிக்கிறான். சமீபத்திய ஆய்வுகளின்படி, 1950 ஆண்டின் வேளாண்மை உற்பத்தியை ஒப்பிடும்போது, 250 மடங்கு விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. பிறதுறைகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்கா, விவசாயத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. பயிர் சுழற்சி உயிரித் தொழில்நுட்பம் மூலமாக இந்நாடு வெற்றியைக் கண்டுள்ளது. அமெரிக்காவில் சோளம், ஆப்பிள், திராட்சை, பருத்தி, சோயா, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கோதுமை, ஆரஞ்சு, தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 23 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தன் மொத்த வருமானத்தில் 13.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை விவசாயம் மூலமாக ஈட்டுகிறது. 

இந்தியா - அமெரிக்கா

 Photo - Wired


4. பிரேசில்

தென் அமெரிக்காவின் இதயம் என அழைக்கப்படுவது பிரேசில். 86 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் சுமார் 20 கோடி மக்கள் தொகையுடன் காணப்படுகிறது. அமேசான் நதியைக் கொண்ட பிரேசில் 100 சதவிகிதம் விவசாயம் செய்வதற்கு ஏற்றது. நாட்டின் ஜி.டி.பியில் 5.7 சதவிகிதம் மட்டுமே விவசாயம் மூலம் கிடைக்கிறது. மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகித இடங்களில் விவசாயமும், 15 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர். பிரேசில் 2013-14 -ம் ஆண்டில் ஜி.டி.பியில் 7.3 சதவிகிதம் எனும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பிரேசில் காபி, சர்க்கரை, சோயா பீன்ஸ், கோ-கோ, மரவள்ளிக் கிழங்கு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. உலகில் சோயா பீன்ஸ் மற்றும் சோளம் உற்பத்தி செய்யும் நாடுகளின் தரவரிசையில் பிரேசிலுக்கு 2 - வது இடம். பருத்தி உற்பத்தியில் 5-வது இடம் வகிக்கும் நாடும் பிரேசில்தான். பிரேசிலின் உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 8 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண்மை மூலம் ஈட்டப்படுகிறது. 

பிரேசில் விவசாயம்

 Photo - Investing.com 


5. இந்தோனேசியா

19 லட்சம் ச.கி.மீ பரப்பளவைக்கொண்ட தீவுப்பகுதி. 25.5 கோடி மக்கள் அத்தீவில் வசித்து வருகின்றனர். இந்தோனேசியா அதன் இயற்கை முறைகளை நம்பி, இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறது. ரப்பர், கோ-கோ, காபி, தேயிலை, அரிசி, பாமாயில், மசாலாப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முன்னிலையில் உள்ளது. மேலும், உலகின் அதிகக் கரும்பு, ரப்பர் மற்றும் புகையிலை பயிர்களைப் பயிரிடும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நாட்டில் மொத்த வருமானத்தில் 8 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண்மை மூலமாகக் கிடைக்கிறது. 

இந்நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு நாடும் விவசாயத்தை முனைப்புடன் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!