"வடகொரியா அணுஆயுதத்தை கைவிட்டதற்கு ஆதாரம் இல்லை!" புலம்பும் அமெரிக்கா

சமீபத்தில் வெளியான தகவலின்படி, வடகொரியா தனது ரகசியத் தளங்களில் அணு ஆயுதத்தைப் பலப்படுத்துவதற்காக அணு ஆயுதம் தயாரிக்கத் தேவைப்படும் எரிபொருளான யுரேனியத்தின் உற்பத்தியை வடகொரியா அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

திரும் புதிருமாக மாற்றி, மாற்றி 'அணு ஆயுதம் ஏவுவோம்' என்று பரம எதிரியாக பகைகொண்டு போர் புரியும் முனைப்பில் இருந்து வந்தன அமெரிக்காவும், வடகொரியாவும். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சிங்கப்பூரில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, 'அணு ஆயுதத் தடவாளங்களால் இனி எந்த ஆபத்தும் ஏற்படாது' என வடகொரிய அதிபர் தெரிவித்ததால், "சந்திப்பு வெற்றியடைந்தது; இனி வடகொரியா மூலம் அணு ஆயுத ஆபத்து ஏதும் இல்லை. அமெரிக்கர்கள் இனி நிம்மதியாகத் தூங்கலாம்" என்று டிரம்ப் ட்வீட் செய்தது, அமெரிக்க அதிபரின் வெற்றியைப் பலவீனப்படுத்தியுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் வெளியான தகவலின்படி, வடகொரியா தனது ரகசியத் தளங்களில் அணு ஆயுதத்தைப் பலப்படுத்துவதற்காக அணு ஆயுதம் தயாரிக்கத் தேவைப்படும் எரிபொருளான யுரேனியத்தின் உற்பத்தியை வடகொரியா அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதை அமெரிக்க உளவுத்துறையும் உறுதிசெய்துள்ளது.

வடகொரியா கிம்

"தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத வசதிகளை டிரம்பிடம் மறைப்பதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கிறார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன். இரண்டு நாடுகளும் அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக, சந்திப்பின்போது ஒப்புக்கொண்ட பின்னர் கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்க ராணுவத்தை வாபஸ்பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டார் டிரம்ப். இதுபோன்று இன்னும் பல சலுகைகளுக்காகவே, அணு ஆயுதத் தயாரிப்பை மறைத்துள்ளது அந்நாடு" என்கிறார்கள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்.

வடகொரியாவின் முக்கிய அணு ஆயுதத் தளவாட உற்பத்தி நிலையங்களில் ஒன்றான யாங்பியாங் அணு ஆலையின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அந்நாடு அதிவேகத்தில் மேம்படுத்தி வருகிறது. ஜூன் 21-ஆம் தேதி செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாயிலாக இந்தத் தகவல் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அண்மையில் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்குச் சென்றபோது, அணு ஆயுதத்திட்டங்களைக் கைவிடுவது தொடர்பாக வடகொரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. வடகொரியா கடந்த ஏழுமாத காலமாக எந்தவிதமான ஏவுகணை சோதனையையோ, அணு ஆயுத சோதனையையோ நடத்தாத நிலையில், அந்நாடு யுரேனியத் தயாரிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிம் - ட்ரம்ப்

அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், "வடகொரியா தனது அணு ஆயுத இருப்பை குறைத்துக் கொண்டதற்கோ அல்லது உற்பத்தியை நிறுத்தியதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவை ஏமாற்ற அந்நாடு முயற்சி செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. யாங்பியாங் தவிர, மேலும் ஓரிரு இடங்களில் வடகொரியா ரகசியமாக யுரேனியம் தயாரிக்கக்கூடும். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை, வடகொரிய பல நாள்களாக எங்களிடம் மறைத்துள்ளது" என்று கூறியுள்ளார். டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய ஒருவாரத்திற்குள்ளாகவே அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரியாவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அந்தப் பயணம் இயலாமல் போனது.

இதனிடையே, அமெரிக்க தேசிய வெளியுறவுக் கொள்கைக்கான முன்னாள் ஆலோசகரும், ஆசிய விவகாரங்களுக்கான முன்னாள் இயக்குனருமான விக்டர் ஸா கூறுகையில், "வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, செல்வதற்கு இதுவே சரியான தருணம். இதுவே, தாமதம்தான் என்றாலும், அமெரிக்கா - வடகொரியா அதிபர்கள் கையெழுத்திட்ட அணு ஆயுத நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள், வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு ஏற்படாவிட்டால் அமெரிக்க அமைச்சருக்குக் கடும் நெருக்கடி ஏற்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!