காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்! | Arizona woman kills her son to avoid being sent into care home

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (04/07/2018)

காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்!

தன்னைக் காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனை 92 வயதான தாய் சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

மகன்

Photo Credits : Twitter/@Nicole Crites‏

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் தன் மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வருபவர் 92 வயதான அன்னா மே பிளசிங்ஸ். 72 வயதான மகனால் பிளசிங்ஸை கவனித்துக்கொள்ள முடியவில்லை என அடிக்கடி மகனே தன் தாயிடம் கூறிவந்துள்ளார். ஒரு நாள் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தனது அம்மாவை முதியோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார் பிளசிங்ஸின் மகன். ஆனால் பிளசிங்ஸ் அதை ஏற்கவில்லை. 'நான் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்' எனத் தன் மகனிடம் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், பிளசிங்ஸின் பேச்சை சற்றும் கேட்காத அவரின் மகன், தாயை காப்பகத்தில் சேர்ப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று தன் கணவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியுடன் தன் மகனின் அறைக்குச் சென்ற பிளசிங்ஸ் மகனை நோக்கிப் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது மகன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தொடர்ந்து மருமகளையும் சுட முயன்றுள்ளார். ஆனால், அவர் பிளசிங்ஸின் குறியிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பிளசிங்ஸைக் கைது செய்துள்ளனர். மகனை கொலை செய்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிளசிங்ஸ் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவர் இருசக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.