`ரவுடியைப்போல் நடந்துகொள்கிறார்கள்' - அமெரிக்காவை சீண்டும் வடகொரியா!

அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவின் செயல்பாடு ரவுடிகளைப் போல் உள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது. 

கிம் ஜாங் உன் - ட்ரம்ப்

கடந்த மாதம் உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு. எதிரி நாடுகளாகக் கருதப்படும் வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் அதிபர்களும் கைகுலுக்கிக் கொண்டதுதான் இதற்கான காரணமும். சந்திப்புக்குப் பின் இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டதுடன் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதனால் இருநாடுகள் இடையேயான பகை தணியும் என்றே அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அணு ஆயுத ஒழிப்பை கண்காணிக்க அமெரிக்க பிரதிநிதி ஒருவர் வடகொரியா சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டார். 

இந்த நிலையில்தான் அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவின் செயல்பாடு ரவுடிகளைப் போல் உள்ளது என வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வடகொரிய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ``அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்க பிரதிநிதியின் செயல்பாடு ரவுடித்தனமாக உள்ளது. எங்களது பொறுமையையும், நல்ல எண்ணத்தையும் அமெரிக்கா தவறாக புரிந்துகொண்டுள்ளது. வற்புறுத்தல் என்ற பெயரில் எங்கள் மீது அதிக அழுத்தம் தரமுடியாது. எங்களின் தனித்தன்மையை எந்தநிலையிலும், நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். சிங்கப்பூரில் நடந்த இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி நாங்கள் அணு ஆயுத ஒழிப்பை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்தக் கருத்து இருநாடுகள் இடையே அணைந்திருந்த பகைமைத் தீயை மீண்டும் கொளுத்திவிட்டதுபோல் அமைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!