வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (10/07/2018)

கடைசி தொடர்பு:18:25 (10/07/2018)

3 நாளில் 13 பேரும் மீட்பு! 18 நாள்களுக்குப் பிறகு வெளி உலகத்தைப் பார்த்த தாய்லாந்து சிறுவர்கள்

தாய்லாந்தில் குகையில் சிக்கிய கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மீட்டனர். 

தாய்லாந்து

தாய்லாந்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி, 16 வயதுக்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் அங்குள்ள தாம் லுவாங் குகைக்குச் சுற்றுலா சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களது நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு ராணுவமும் கடற்படையும் ஈடுபட்டன. 9 நாள்களுக்குப் பிறகு அவர்கள் குகைக்குள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. குகை பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. குகைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. குகைக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததால் சிறுவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்ளும்போது நீர்மூழ்கி வீரர் ஒருவர் பலியானார். 

இதையடுத்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. நேற்று 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 4 சிறுவர்களையும் பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. குகையிலிருந்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவர்கள் தற்போது நலமாக உள்ளனர். அவர்கள் சில வாரங்கள்  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

பயிற்சியாளரும், சிறுவர்களும் மீட்கப்பட்ட நிலையில் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள அந்த குகைக்கு தாய்லாந்து பாதுகாப்புப்படை சீல் வைத்தது. தாய்லாந்து பாதுகாப்புப்படை 3 நாள்கள் கடுமையாக போராடி இவர்களை மீட்டுள்ளது.