பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 12 பேர் பலி!

தாக்குதல்

பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அந்நாட்டின் பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தானின் முக்கிய நகரமான பெஷாவரில் நேற்றிரவு தேசிய அவாமி கட்சியின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலர் பங்கேற்றுப் பேசினார். அக்கட்சியைச் சேர்ந்த  தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் பொதுக் கூட்டம் நடைபெற்ற பகுதியில் கூடியிருந்தனர். 

இந்நிலையில், மக்கள் கூட்டத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவினர். தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தற்கொலைப்படைத் தாக்குதலால் அப்பகுதியே ரணகளமானது. கூடியிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் சிதறி ஓடினர். பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்திலேயே 12 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். பிரசார கூட்டத்தில் பங்கேற்ற தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தேர்தல் சமயத்தில் நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப்படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!