மீட்புப் பணியில் ரியல் ஹீரோவாக செயல்பட்ட ஆஸ்திரேலிய டாக்டருக்கு வந்த துயரச் செய்தி!

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டனர். இந்த மகிழ்ச்சியை தாய்லாந்து மட்டுமல்லாது உலக நாடுகளே கொண்டாடி வருகிறது. ஆனால், கடைசிவரை சிறுவர்களுடன் இருந்த ஆஸ்திரேலிய டாக்டருக்கு, தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவர்

தாய்லாந்தில் உள்ள  தி தம் லுஅங் குகைக்குள் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று சென்ற சிறுவர்கள் அன்று பெய்த கனமழையினால் குகையினுள் சிக்கிக்கொண்டனர். அதன் பின் ஒரு வாரகாலமாக இவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகை முழுவதும் பல அடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்ததால், அவர்களைக் கண்டுபிடித்தும் வெளியில் கொண்டுவர முடியாமல் முதலில் மீட்புப் படையினர் திணறினர். பின்பு இதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்தது தாய்லாந்து அரசு. இந்த மீட்புப் பணியில் தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1,000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். குகை மற்றும் அதைச் சுற்றியுள்ள மொத்த இடங்களையும் ஆராய்ந்து எப்படி குகையினுள் சென்றால் சிறுவர்களை எளிதாக மீட்க முடியும் எனப் பொறுமையாக திட்டமிட்டு மிகப் பெரிய சாதனையை மூன்றே நாளில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் மீட்புப் படை வீரர்கள். 

 

ஒரு புறம் குகையினுள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. மற்றொரு புறம் சர்வதேச அளவில் உள் நீச்சலில் தேர்ந்த வீரர்கள், தாய்லாந்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. மேலும், சிறுவர்கள் நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருக்கக் குகையினுள் அவர்களுக்கு தியானப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நன்கு நீச்சல் தெரிந்த மருத்துவர் ஒருவரும் குகையினுள் சென்றார். அவர் சிறுவர்களின் உடல்நிலையைச் சோதித்து யாரை முதலில் வெளியில் அனுப்புவது போன்ற அறிவுரைகளை வழங்கினார். அந்த மருத்துவர் சிறுவர்களுடன் மூன்று நாள்கள் குகையினுள் இருந்துள்ளார். அனைத்துச் சிறுவர்களையும் மீட்டப் பின்னர் இறுதியாக வெளியில் வந்தவரும் இவர்தான்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ்தான் அது. இவர் தாய்லாந்து குகையில் மீட்புப் பணி நடைபெறும்போது தனது விடுமுறை நாள்களை கழித்துவந்துள்ளார். நன்கு நீச்சல் தெரிந்த, விருப்பமுள்ள மருத்துவர்கள் இந்த மீட்புப் பணிகளில் உதவ முன்வர வேண்டும் என்ற தாய்லாந்து அரசின் அழைப்பை ஏற்று உடனடியாக தாய்லாந்து வந்து இறங்கினார். பின் சிறுவர்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைச் செய்துவந்தார்.

நேற்று அனைத்துச் சிறுவர்களும் மீட்கப்பட்ட மகிழ்ச்சியை தாய்லாந்து மட்டுமல்லாது அனைத்து நாடுகளும் கொண்டாடி வந்தது. இந்த மீட்புப் பணிகளில் ரியல் ஹீரோக்களாக செயல்பட்ட வீரர்களுக்குத் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால், இந்த மகிழ்ச்சியில் மருத்துவர் ஹாரியால் பங்கேற்க முடியவில்லை. ஹாரி குகையில் இருந்து வெளியில் வந்த உடனேயே அவரின் தந்தை ஆஸ்திரேலியாவில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. இதனால் உடனடியாக ஆஸ்திரேலியா பறந்துள்ளார் மருத்துவர். உலகமே சிறுவர்கள் மீட்கப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும்போது அவர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவரின் தந்தை இறந்த சம்பவம் தாய்லாந்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!