`நீ இல்லாதபோது சுவாசிக்க விரும்பவில்லை’ - உயிரிழந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி உருக்கம்

தாய்லாந்தில், குகையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உயிரிழந்த நீர்மூழ்கி வீரரின் மனைவி, தன் கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

நீர்மூழ்கி வீரர்

Photo Credit: https://www.instagram.com/p/Bk8QXSxnDVf/?taken-by=valeepoan_sinmongkolsup

தாய்லாந்துக் குகையில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்கச் சென்ற நீர்மூழ்கி வீரர் சமன் குனான், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார். அவரது இறப்புகுறித்து சமனின் மனைவி ஜூலை 7-ம் தேதி இன்ஸ்டாகிராமில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு, உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். “நீங்கள் எப்போதும் என்னுடன்தான் உள்ளீர்கள். உங்களைப்போன்று யாரும் இருக்க முடியாது. நீங்கள் என்னுடன் இல்லாத நேரத்தில் நான் சுவாசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாம் ஒரே மூச்சை சுவாசிப்பதாக இருவரும் சத்தியம் செய்துள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். நேற்றைய பதிவில், “நான் உன்னை இழந்து தவிக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீதான் எனக்கு எல்லாம்” எனப் பதிவிட்டுள்ளார். கணவனை இழந்து தவிக்கும் இவருக்கு நண்பர்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக, தாய்லாந்தில் கடந்த ஜூன் 23-ம் தேதி, 16 வயதுக்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் அங்குள்ள தாம் லுவாங் குகைக்குச் சுற்றுலா சென்றனர். அப்போது, திடீரென மழைபெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களது நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு ராணுவமும் கடற்படையும் ஈடுபட்டன. 9 நாள்களுக்குப் பிறகு, அவர்கள் குகைக்குள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகையின் நுழைவு வாயிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அவர்கள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு, நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது .  

குகைக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததால், சிறுவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், சிலிண்டர்கள்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  21 சதவிகிதம் ஆக்ஸிஜன் இருக்கவேண்டிய இடத்தில் 15 சதவிதம் தான் இருந்தது. இதையடுத்து, நீர்மூழ்கி வீரர்கள் சிலிண்டர்கள்மூலம் ஆக்ஸிஜனை கொண்டுசென்றனர்.  இந்தப் பணியை மேற்கொள்ளும்போதுதான், நீர்மூழ்கி வீரர்  சமன் குனான் உயிரிழந்தார். சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் வழியில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார்.  உடன் சென்ற வீரர்கள் வெளியில் வந்தபோதுதான், சமன் குனான் இல்லாதது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அவர் இறந்திருந்தார். இதையடுத்து, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. குகையில் இருந்த 13 பேரும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!