'குழந்தைகளுக்கு ரோல்மாடலாக இருக்க விரும்புகிறேன்' - `மிஸ் யுனிவர்ஸ்' ஸ்பெயின் திருநங்கை!

'குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்' என உலக அழகிப்போட்டியில் பங்கேற்க உள்ள ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த திருநங்கை பான்ஸ் கூறியுள்ளார்.

திருநங்கை ஏஞ்சலா பான்ஸ்

திருநங்கைகள் தற்போது பலதுறைகளிலும் சாதித்துவருகிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான், சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினி, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்தியஸ்ரீ சர்மிளா உள்ளிட்டோர். திருநங்கைகளும் நம்மைப்போல சக மனிதர்கள்தாம் என்பதை உணர்த்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதை சரியாகப் பயன்படுத்தி, அனைத்துத் துறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றிக்கொடி நாட்டிவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நடந்த `மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின்' போட்டியில், தனது 20 சக போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, ஸ்பெயின் நாட்டு அழகியாக முடிசூடப்பட்டவர், ஏஞ்சலா பான்ஸ். 26 வயதான இந்த அழகி, `பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில், ஸ்பெயின் சார்பில் பங்கேற்க உள்ளார்.

மாடலிங் துறையில் கோலோச்சிவரும் ஏஞ்சலா பான்ஸ், உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதுகுறித்து கூறுகையில், ``திருநங்கைகளுக்கான முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் போட்டியைப் பார்க்கிறேன். இதன்மூலம், உலகெங்கும் உள்ள மூன்றாம் பாலினக் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். திருங்கைகள் அதிக அளவில் தற்கொலைசெய்துகொள்கின்றனர். அவர்களின் தற்கொலைகளைத் தடுத்து, அவர்களையும் சாதனையாளர்களாக மாற்ற இதுபோன்ற ஒரு தளம் மிகவும் உதவும்" என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!