காற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு!

டெப்ரா வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கேட்ஃபோர்ட்(Catford) பகுதியில்தான் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் நிலையம் அமைந்திருந்தும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க முடியாமல் போனதுதான் அவலத்தின் உச்சம். 

காற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு!

2013 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி ஆஸ்துமாவின் தீவிரத் தாக்குதலால் லண்டனின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் ஒன்பது வயதுடைய எல்லா கிஸ்ஸி டெப்ரா (Ella Kissi-Debrah). அடுத்த 8 நாள்கள் தீவிரப் போராட்டத்துக்குப் பின் இறக்கிறாள் டெப்ரா. வெறும் ஆஸ்துமாவால் ஒன்பது வயதுச் சிறுமி இறந்திருக்க முடியாது என அழுது தீர்த்த டெப்ரா தாயாரின் கண்ணீருக்கு வலு சேர்த்திருக்கிறது தற்போது வெளிவந்திருக்கும் சில ஆதாரங்கள். உலகின் மிகப்பெரிய மாநகரங்களில் லண்டனுக்கு முக்கியமான இடம் உண்டு. மாநகரங்களுக்கே உரித்தான பிரச்னைகளில் முக்கியமானது காற்று மாசுபாடு. அளவுக்கதிகமான வாகனங்களின் நெருக்கடியும் தொழிற்சாலைகளும் மாநகரங்களின் காற்றை இயல்பாய் இருக்க விடுவதில்லை. டெப்ரா இறந்ததற்கும் இந்தக் காற்று மாசுபாடுதான் காரணம் என்கின்றனர். லண்டனில் சட்டவிரோதமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் பலர் இறப்புக்குக் காரணமாக அமையலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள ஹிதெர் கீரின் (Hither Green) மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் டெப்ராவின் குடும்பத்தினர். 2010ல் முதன்முறையாகச் சாதாரண இருமலுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டெப்ராவுக்கு அதன்பின் மருத்துவமனையே கதி என்றானது. ஆஸ்துமா தாக்கிய மூன்று வருடங்களில் 27 -க்கும் மேற்பட்ட தடவை மருத்துவமனை படுக்கைகளில் சீரியஸாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்துமாவுக்குதானே மருந்துகள் இருக்கிறதே... அப்படி இருக்கும்போது டெப்ராவை ஏன் காப்பாற்ற முடியவில்லை? இதற்கு சவுத்தம்டான் பல்கலைக்கழகப் (University of Southampton) பேராசியர் ஸ்டீபன் ஹோல்கேட்டின் (Stephen Holgate) ஆய்வு முடிவுகள் தற்போது பதில் தந்துள்ளன. அவரது ஆய்வின்படி ஆஸ்துமாவினால் டெப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களில் சுற்றுப்புறத்தின் காற்று மாசுபாடு சட்டவிரோதமாக நிறையவே அதிகரித்துள்ளது. முக்கியமாக நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு காற்றில் அதிகரித்து மாசுபாட்டின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. முக்கியமாக டெப்ராவின் வீடு அமைந்துள்ள பகுதியில் இந்தக் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்துள்ளது. 

காற்று மாசுபாடு

இதுகுறித்து பேராசிரியர் ஸ்டீபன் மேலும் கூறுகையில், ``காற்று மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகரிக்காமல் இருந்திருந்தால் டெப்ரா இறந்திருக்க வாய்ப்பில்லை. அதீதமான காற்று மாசுபாடு டெப்ராவின் ஆஸ்துமா நோயைக் குறுகிய காலத்திலேயே தீவிரப்படுத்தியுள்ளது. மாசுபாட்டை சகித்துக்கொள்ளும் வாழ்நிலையில்தான் அந்தக் குடும்பம் வாழ்ந்துள்ளது. எவரும் குழந்தைகள் இறப்பதைப் பார்க்க விரும்புவதில்லை. அரசின் அலட்சியமும் நமது அலட்சியமும்தான் டெப்ராவைக் கொன்றிருக்கிறது" என்கிறார். இந்த ஆய்வைக் கருத்தில் கொண்டு டெப்ரா இறப்பை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் டெப்ராவின் குடும்பத்தினர். டெப்ராவின் வீடு அமைந்துள்ள சவுத் சர்குலர் சாலை (South Circular Road) பகுதியானது லண்டனின் காற்று மாசுபாடு மிகுதியான பகுதிகளில் முக்கியமானது. இப்பகுதியில் காற்றில் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவானது அனுமதிக்கப்பட்ட 40 µg/m3 அளவை விட எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. டீசலில் இயங்கும் வாகனங்கள்தாம் நைட்ரஸ் ஆக்ஸைடை அதிகம் வெளியிடுகின்றன. மேலும், லண்டனின் பெருகிய வாகனங்களும் அதன் அடர்த்தியும் மாசுபாட்டை அதிகரிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் 2018 இல் லண்டனில் மராத்தான் ஓட்டத்திற்காக அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டபோது காற்று மாசுபாடு அளவானது 89% குறைந்துள்ளது. 

சமீபகாலமாக இங்கிலாந்தில் காற்று மாசுபாடு மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் 40,000 பேர் இளமைப் பருவத்திலேயே இங்கிலாந்தில் ஒரு வருடத்துக்குள் இறக்கின்றனர். இதன் விளைவாகக் காற்று மாசுபாட்டை உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) கூட பொது சுகாதார அவசர நிலை (public health emergency) என பிரகடனப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் 4.5 பில்லியன் குழந்தைகள், சிறுவ, சிறுமியர் காற்று மாசுபாட்டின் நச்சு நிலைகளில் வளர்கின்றனர் என யுனிசெஃப் (UNICEF) தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு பெரியவர்களை விடக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதால் சாலைகளில் நடக்கும்போது வாகனங்களின் புகையால் எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இவையெல்லாம் ஆய்வு முடிவுகளாகச் சொல்லப்பட்டாலும் ஒருவரின் இறப்புக்குக் காற்று மாசுபாடுதான் காரணம் என ஆதாரத்தோடு வழக்கு  பதிந்திருப்பது இதுதான் முதல் முறை. 

எல்லா கிஸ்ஸி டெப்ரா (Ella Kissi-Debrah)ஆனால், இதையெல்லாம் சீரமைக்க இங்கிலாந்து அரசு அழுத்தமான முயற்சிகளை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள்தாம் எழுந்துள்ளன. 2010 லிருந்து இங்கிலாந்து அரசே அதன் சட்டங்களை மீறும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும் பொதுமக்கள் வெளியேற்றும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதிலும் தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் மேல் தொடரப்பட்ட வழக்கில் கூட உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை சட்டவிரோதமாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டைச் சீரமைப்பதை நிரூபிக்க முடியாமல் தோற்றுள்ளது. தற்போது அந்த வழக்கு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசின் அலட்சியம்தான் டெப்ராவின் இறப்பிற்குக் காரணம் என்கின்றார் ஸ்டீபன். டெப்ரா வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கேட்ஃபோர்ட்(Catford) பகுதியில்தான் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் நிலையம் அமைந்திருந்தும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க முடியாமல் போனதுதான் அவலத்தின் உச்சம். 

``டெப்ரா எப்போதும் சவுத் சர்குலார் சாலையின் வழியாகத்தான் பள்ளிக்குச் செல்வாள். அதனாலேயே அடுத்த மகனை இப்போது அந்த வழியாக அனுப்புவதில்லை" என்கிறார் டெப்ராவின் தாயார் அடோ கிஸ்ஸி டெப்ரா (Adoo-Kissi-Debrah). அவரது மற்றொரு மகனுக்கும் ஆஸ்துமா நோய் பாதித்துள்ளது. டெப்ரா அளவுக்கு இன்னும் தீவிரமாகவில்லை. காற்று மாசுபாடுதான் மகனுக்கும் ஆஸ்துமாவைக் கொண்டு வந்திருக்கும் என நம்புகிறார் அடோ. டெப்ராவின் பள்ளியையும் வசிக்கும் இடத்தையும் மாற்றி அதிகம் மாசில்லாத பகுதிக்குச் செல்ல பலரும் அறிவுரை செய்துள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ``காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது எனத் தெரிந்தபோது வீட்டின் கதவு ஜன்னல், என எல்லாத்தையும் இறுகப் பூட்டி வைத்தே உள்ளேன். வெளியே உள்ள மாசு வீட்டுக்குள் வரக் கூடாது" எனக் கவனமாகத்தான் இருந்தேன் என்றும் கூறுகிறார் அடோ. இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல், ``டெப்ராவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது விண்ணப்பத்தை ஏற்பது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து சட்டத்தின் இரண்டாம் பகுதியின் படி வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். ஆனால் அதனை அரசு காப்பாற்றவில்லை என்பதன் வெளிப்பாடுதான் டெப்ராவின் மரணம். இங்கிலாந்து உலகின் பழமையான, பாரம்பர்யமான நகரங்களில் ஒன்று. சுத்தமான நகரம் என்றும் நம்மால் நம்பப்படும் ஒன்று. அங்கேயே காற்று இவ்வளவு மாசைடந்திருக்கிறது என்றால்.... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!