“ஹீமா சாதிப்பார்!” என்றார் பி.டி.உஷா... சாதித்தார் ஹீமா! #HimaDas

வரும் ஞாயிற்றுக்கிழமை  நடக்கவிருக்கும் உலக கால்பந்து ஆட்டத்தின் இறுதி போட்டிக்காக காத்துக்கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் உலக U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் ஹீமா தாஸ்!

“ஹீமா சாதிப்பார்!” என்றார் பி.டி.உஷா... சாதித்தார் ஹீமா! #HimaDas

ரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கப்போகும் உலகக் கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டிக்காக உலகமே காத்துக்கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் பின்லாந்தில் நடந்துகொண்டிருக்கும் உலக  U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்திருக்கிறார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை, ஹீமா தாஸ்.

ஹிமா

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 400 மீட்டர் ஒட்டப்பந்தய தூரத்தை, 51.46 நொடிகளில் கடந்து, இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் ஹீமா தாஸ். அப்பாவின் விவசாய நிலத்தில் ஒட்டப் பயிற்சியை தொடங்கியவர் இவர். 18 மாத கடுமையான பயிற்சிக்குப் பின்னர், இன்று இந்த வரலாற்றுச்  சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதன்மூலம், 2016-ம் ஆண்டு, போலாந்து நாட்டில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார் ஹீமா தாஸ்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் (Nagaon) மாவட்டத்தில் உள்ள டிங்கு (Dhing) என்ற கிராமத்தில், 2000 ஜனவரி 9-ம் தேதி பிறந்தவர், ஹீமா. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டபோதே, 400 மீட்டர் ஒட்டத்தை 51.13 நொடிகளில் கடந்து சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த வீராங்கனையும் சர்வதேச தடகளப் போட்டிகளில், இந்தியா சார்பாக தங்கம் வென்றதில்லை. 

கடந்த வருடத்திலிருந்துதான், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார் ஹீமா. ஆரம்பத்தில், அவரின் ஆர்வம் கால்பந்து விளையாடுவதில்தான் இருந்தது. ஏனென்றால், ஹீமாவின்  அப்பா கால்பந்து விளையாடுவார். ”எனக்குக் கால்பந்து விளையாடுவதில்தான் ஆர்வம். ஆனால், கால்பந்து அணி இருக்கிறதா இல்லை என்பது பற்றியெல்லாம் தெரியாது. அது நம் நாட்டில் அவ்வளவு பிரபலமாக இருக்கிறதா என்பதும் தெரியாது. அப்போதுதான் என் பள்ளி விளையாட்டு பயிற்சியாளர், தடகளத்தின் கவனம் செலுத்துமாறு கூறினார். பிறகு, ஒட்டபந்தயத்தில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். கவுஹதி சென்று பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதற்கு முழு ஆதரவு அளித்தது அஸ்ஸாம் கூட்டமைப்பு (Assam Association). அவர்களுக்கு நன்றி" என ஒருமுறை கூறியிருக்கிறார் ஹீமா தாஸ்.

ஹிமா

சில நாள்களுக்கு முன்னர், முன்னாள் ஒட்டப்பந்தய வீராங்கனை பி.டி .உஷாவிடம் இவரைப் பற்றி கேட்டபோது, "மிகக் குறுகிய காலத்திலேயே ஹீமா தாஸ் அபாரமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்  400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை 51.13 நொடிகளில் முடித்திருக்கிறார். நிச்சயம் பல பதக்கங்களை இந்தியாவுக்காக வெல்வார்" என்று நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். அவரின் நம்பிக்கையைத் துளியும் பிசகாமல் நிரூபித்திருக்கிறார் ஹீமா.

ஹீமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு, பிரதமர் நரேந்தி மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர்  ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஒருமுறை ஹீமா தாஸிடம் அவரின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, "எல்லா தடகள வீராங்கனைகள்போல எனக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் கனவு இருக்கிறது. 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுவதுதான் தற்போதைய என் எதிர்காலத் திட்டம்" எனத் தெளிவாகச் சொன்னார் ஹீமா. 

இந்த வார்த்தைகளுக்கு நம்பிக்கை சேர்க்கும் விதமாக, தற்போதைய சாதனை அமைந்திருக்கிறது. இது, ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை அடையவேண்டிய ஒன்று!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!