விமானநிலையத்திலேயே நவாஸ் ஷெரீஃப் கைது..! லாகூரைச் சூழந்த தொண்டர்கள்; போலீஸ் குவிப்பு | Former Pakistan PM Nawaz Sharif and his daughter arrested

வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (13/07/2018)

கடைசி தொடர்பு:11:49 (14/07/2018)

விமானநிலையத்திலேயே நவாஸ் ஷெரீஃப் கைது..! லாகூரைச் சூழந்த தொண்டர்கள்; போலீஸ் குவிப்பு

பாகிஸ்தான் சென்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும், அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டனர். 

நவாஸ் ஷெரிப்

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அந்த ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மரியம், மருமகன் கேப்டன் சர்தார் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகளும், மரியமுக்கு 7 ஆண்டுகளும் கேப்டன் சர்தாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் மனைவி குல்சூர் நவாஸை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் மகள் மரியம் லண்டன் சென்றிருந்தனர். லண்டனிலிருந்து விமானம் மூலம் அபுதாபி சென்ற அவர்கள், அங்கிருந்து இன்று 10 மணி அளவில் பாகிஸ்தானின் லாகூர் சென்றடைந்தனர். அங்கு, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும், லாகூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டனர்.

லாகூர் விமான நிலையத்துக்கு வெளியே, நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அதனையடுத்து, கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு லாகூர் முழுவதும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக லாகூர் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.