அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக லண்டனில் குவிந்த மக்கள்! | trump gets unwelcome in Britain visit

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (14/07/2018)

கடைசி தொடர்பு:10:45 (14/07/2018)

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக லண்டனில் குவிந்த மக்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் இங்கிலாந்து பிரதமர் மற்றும் ராணியைச் சந்தித்தார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபரின் வருகையை பிரிட்டன் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ட்ரம்ப் -க்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரட்டன் வந்த அதிபர் ட்ரம்ப், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், இங்கிலாந்து பிரதமர் மற்றும்  ஐரோப்பாவின் சில கொள்கைளை விமர்சித்திருந்தார். மேலும், ஐரோப்பா தனது கலாசாரத்தை இழந்து வருவதாகவும் தெரிவித்தார்.

போராட்டம்

இதுதொடர்பாக பின்னர் கருத்து தெரிவித்த ட்ரம்ப், `நான் பிரிட்டன் பிரதமரை விமர்சிக்கவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் குறித்து பாராட்டிப் பேசியது எதுவும் ஊடகத்தில் வரவில்லை. அதனை அவர்கள் தவிர்த்துவிட்டனர். பத்திரிகையாளர்கள் முழு பேட்டியை பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

நாடாளுமன்றம் முன்பு போராட்டம்

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் வருகைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாகைகள் மற்றும் கோஷங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அகதிகள் குறித்த அதிபரின் பார்வை, பெண்கள் தொடர்பான கருத்துகள்,  உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மத்திய பிரிட்டனில் அதிபர் ட்ரம்பை ஒரு குழந்தைபோல் சித்திரித்தும், அந்த உருவத்தில் பெரிய பலூன் செய்தும் பறக்க விட்டனர். ட்ரம்ப் வருகையைவிட அவருக்கான எதிர்ப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. 

ட்ரம்ப்

இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசிய ட்ரம்ப், ‘லண்டன் நகர் எனக்குப் பிடிக்கும். நான் அதிக காலம் அங்கு இருந்தது கிடையாது. எனக்கு விரும்பத்தகாத வரவேற்புதான் கிடைத்துள்ளது. அதனால், இந்த இடத்தில் எனக்கு வேலை இல்லை’ என்றார்.