300 முதலைகளைக் கொன்றுபோட்ட `மனித’ கும்பல்! - இந்தோனேஷியாவை உலுக்கிய பழிதீர்க்கும் சம்பவம்

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 300க்கும் மேற்பட்ட முதலைகளைக் கொன்று போட்ட கோரச் சம்பவம்  இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது.

முதலைகள்
 

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் மிகப்பெரிய முதலைப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. முதலைப் பண்ணைக்கு அருகே குடியிருப்புப் பகுதியும் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் முதலைப் பண்ணை அருகே வசிக்கும் 48 வயதான சுகிட்டோ என்பவர், தன் கால்நடைகளுக்கு புல் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, புல்வெளியில் இருந்த முதலை அவரின் காலைக் கடித்துள்ளது. முதலையிடம் இருந்து தப்பிக்க பதற்றத்தில் அருகில் இருந்த பண்ணைக்குள் நுழைந்துவிட்டார். அங்கிருந்த மற்ற முதலைகள் அவரை கடித்துக் குதறின. சுகிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரின் இறுதிச்சடங்கு கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. குடியிருப்புப் பகுதியில் முதலைப் பண்ணை அமைக்கப்பட்டதற்குக் கிராம மக்கள் பல நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுகிட்டோ மரணம் கிராம மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. முதலைப் பண்ணையை முற்றுகையிட்டனர். சுகிட்டோ குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாக ஒப்புக்கொண்டது பண்ணை நிர்வாகம்.

பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்தனர். அப்போதும் மக்களின் கோபம் குறையவில்லை. சுகிட்டோவின் உறவினர்கள் பிற கிராம மக்களை ஒன்றிணைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புறப்பட்டு முதலைப் பண்ணையை துவம்சம் செய்தனர். 300-க்கும் மேற்பட்ட முதலைகளைக் கொன்று போட்டனர். முதலைப் பண்ணைக்குள் இருந்த குட்டி முதலைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. முதலைகள் துடிதுடித்து உயிரிழந்தன. முதலைப் பண்ணை நிர்வாகத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். போலீஸும் மக்களைத் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

எது எப்படியோ, குடியிருப்புப் பகுதியில் முதலைப் பண்ணை வைத்ததும், பண்ணை இருக்கும் இடத்தில் கவனமாக இல்லாமல் புல்லை அறுத்ததும் மனிதத் தவறு. ஆனால், தண்டனை முதலைகளுக்கு. இறந்துகிடந்த முதலைகளை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். அவற்றை மகிழ்ச்சியுடன் புகைப்படம் வேறு எடுத்துச் செல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!