இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை!

``இங்கிலாந்தில், மற்ற நாடுகளுக்கு உள்ளது போன்ற விசா விதிமுறை தளர்வை இந்திய மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்” என்று லண்டன் மேயர் சாதிக் கான் கோரிக்கை வைத்துள்ளார்.

விசா விதிமுறை

இங்கிலாந்து நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு படிக்க வரும் மாணவர்களில், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு விசா விதிமுறைகள் எளிதாகவும், சில நாடுகளிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு விதிமுறைகள் கடுமையானதாகவும் இருக்கின்றன. 

``கடுமையான விசா விதிமுறைகள் அடங்கிய பட்டியலிலிருந்து எளிய விதிமுறைகள்கொண்ட பட்டியலுக்குள்  இந்தியாவை சேர்க்க வேண்டும்” இங்கிலாந்து அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார், லண்டன் மேயர் சாதிக் கான். இவர், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

இவர், இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்,``சமீபத்தில், மற்ற நாட்டு மாணவர்களுக்குத் தளர்த்தப்பட்டது போல இந்திய மாணவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். சமீபகாலமாக,  இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 2010-11-ம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 24,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், 2015-16-ம் ஆண்டில் 9000  இந்திய மாணவர்கள் மட்டுமே இங்கிலாந்து வந்துள்ளனர். இதற்குக் காரணம், கடுமையான விதிமுறைகள்தான். விதிமுறைகளைத் தளர்த்துவதன்மூலம் இந்திய மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உருவாக்க முடியும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் சாதிக் கான். 

கடந்த மாதம், இங்கிலாந்து உள்துறை அலுவலகம், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மெக்சிகோ உட்பட 11 நாடுகளுக்கு விசா விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரை சேர்க்கவில்லை. தற்போது, இந்தியாவின் பெயரைச் சேர்க்க பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல்கொடுத்துவருகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!