தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை!

தேர்தல் பிரசாரத்தில் முறையற்ற வார்த்தைகளை இம்ரான் கான் பேசுவதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இம்ரான்

பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில், பல்வேறு கட்சிகள் போட்டியிடும் நிலையில், தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியும் போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் தலைவராக இருப்பவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான். இவரும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த  12-ம் தேதி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பினர். இதுபற்றி கருத்து தெரிவித்த இம்ரான் கான்,``நவாஸ் ஷெரீப்பை விமான நிலையத்தில் வரவேற்கச் செல்பவர்கள் நிச்சயம் கழுதைகளாக இருக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதனால் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தில் முறையற்ற வார்த்தைகளை இம்ரான் கான் பேசுவதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முன் அவர், ஆஜராகும்படி நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இம்ரான் கானுக்கு பதிலாக அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான ``அவான்" ஆஜரானார்.  தேர்தலுக்குப் பின்னர் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!