`இது மீன்களை அழிக்கும், பாறைகளை உருக்கும்!' - அமில மழையின் தாக்கமும் தீர்வும்

அமில மழை என்ற சொல் 1852 -ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் அன்கஸ் ஸ்மித் என்ற வேதியியலாளரால் முதலில் உச்சரிக்கப்பட்டது. வேதியியல் ராயல் சொசைட்டி இவரை 'அமில மழையின் தந்தை' எனக் குறிப்பிடுகிறது

`இது மீன்களை அழிக்கும், பாறைகளை உருக்கும்!' - அமில மழையின் தாக்கமும்  தீர்வும்

மில மழை என்பது சாதாரண மழை போன்றது அல்ல. சாதாரண மழைநீரின் கார அமில நிலை அளவு 5 மற்றும் 6 என்ற அளவில்தான் இருக்கும். ஆனால், அமிலம் கலந்த மழையின் கார அமில அளவு அதிகமாக இருக்கும். அமில மழையில் சல்பியூரிக் அமிலமும், நைட்ரிக் அமிலமும் அதிக அளவில் கலந்திருக்கும். அதிகமாகக் காற்றை மாசுபடுத்தும் சல்பர்-டை -ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் தாக்கத்தால் இது உருவாகிறது. சல்பர்-டை -ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் மழையுடன் கலப்பதாலேயே இம்மழை உண்டாகிறது. 

அமில மழை

Photo - Justinjin

இந்த மழைத்துளிகளானது நிலப்பரப்பை அடைவதற்கு முன்பாகக் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து, மழையாக மாறும். ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த வடிவில் மழையுடன் சேர்ந்து வரும். இது முற்றிலும் மாசடைந்த மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது. எரிமலை வெடிப்பின்போது இயற்கையாகவே இம்மழை உண்டாகும். வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலை புகை மற்றும் மிகப் பழைமையான பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகை எனப் பலவற்றின் மூலமாக இந்த மழை உண்டாகிறது. காற்று மாசுபாட்டை ஒவ்வொருமுறை அதிகரிக்கும்போதும், அமிலம் கலந்த மழையின் விளைவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறோம். 

அமில மழை என்ற சொல் 1852 -ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் அன்கஸ் ஸ்மித் என்ற வேதியியலாளரால் முதலில் உச்சரிக்கப்பட்டது. வேதியியல் ராயல் சொசைட்டி இவரை `அமில மழையின் தந்தை' எனக் குறிப்பிடுகிறது. இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் இருக்கும் தொழில்நகரங்களுக்கு அருகில் மழைநீரை ஆய்வு செய்யும்போது ஸ்மித் அமில மழையினைக் கண்டறிந்தார். 1872-ம் ஆண்டு " Air and Rain: The Beginnings of a Chemical Climatology" என்ற தன் புத்தகத்தில் அமில மழையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் 1950 -ம் ஆண்டு தொடங்கி 1970-ம் ஆண்டில்தான் அமில மழையை உறுதி செய்தனர். 

மழை

நேச்சர் ஜியோசயின்ஸ் பத்திரிகையில் 2014-ம் ஆண்டில் வெளியான தகவல்படி, 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வால்நட்சத்திரம் ஒன்று பூமியின் மீது மோதியதால் டைனோசர்கள் அழிந்தன. அப்போது சல்பர்-ட்ரை -ஆக்ஸைடு காற்றுடன் கலந்தது. அப்போது பெய்த மழை கந்தக அமிலமாக மாறிப் பெய்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. 

4 கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காற்றில் இன்று இருப்பதைப்போல 10,000 மடங்கு அதிக கார்பன் டை ஆக்சைடு இருந்தது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை ஆதரித்தனர், மேலும் புவி மற்றும் கிரக அறிவியல் விஞ்ஞானிகள் எழுதிய கடிதங்களின் முடிவில் 2008-ம் ஆண்டு தங்களது முடிவுகளை வெளியிட்டனர். இதுபற்றி அக்குழுவின் உறுப்பினர் ஜான் வாலி( John Valley) "கார்பன் டை ஆக்சைடின் அளவுகள் அதிகரித்தால் கடுமையான மழை மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த மழையானது பாறைகளைக் கூட கரைக்கும் தன்மை கொண்டது" என்கிறார். 

சல்பர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நீர், ஆக்சிஜன் மற்றும் காற்றில் உள்ள மற்ற ரசாயனங்கள் கலக்கும்போது நிச்சயமாக ஒரு ரசாயன வினை நிகழும். அந்த ரசாயன மாற்றம் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாறி மழையாகப் பொழிகிறது. 

மழை

Photo - Steemit

தாக்கம்..! 

அமில மழை கிட்டத்தட்ட எல்லாவற்றையும் பாதிக்கிறது. குறிப்பாகத் தாவரங்கள், மண், மரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை நிச்சயமாகப் பாதிக்கும். மரங்களில் உள்ள இலைகளை பட்டுப்போகச் செய்து மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிய நேரிடும். இதன் தாக்கம் அதிகமானால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள் இறப்பைச் சந்திக்க நேரிடும். கட்டடங்களின் பளபளப்புத் தன்மை நிச்சயம் பாதிக்கும். மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படியும். 

தீர்வுகள்..! 

மனிதனால் ஏற்படும் அமில மழையைத் தடுக்க பல தீர்வுகள் உள்ளன. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் வாயுக்களையும், புகையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்று மூலமாக இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சாரம் ஆகிய ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு நபரும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் அமில மழை ஏற்படாமல் தடுக்க முடியும். சொந்த வாகனம் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து, நடைப்பயிற்சி, கார் பூலிங் (Car Pooling) சவாரி என நமது வாழ்க்கையைச் சற்றே மாற்றிக் கொள்ளலாம், மக்கள் மின்சாரம் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரமும் புதைபடிவ எரிபொருள்களைப் (நிலக்கரி) பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!