ட்ரம்புக்கு புடின் வழங்கிய கால்பந்து - சோதனை செய்த உளவுத்துறை | Football given to Donald Trump by Vladimir Putin undergoing security checks

வெளியிடப்பட்ட நேரம்: 01:01 (23/07/2018)

கடைசி தொடர்பு:01:01 (23/07/2018)

ட்ரம்புக்கு புடின் வழங்கிய கால்பந்து - சோதனை செய்த உளவுத்துறை

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, ரஷ்ய அதிபர் புடின் வழங்கிய பரிசான கால்பந்தை அமெரிக்க உளவுத்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

புடின்

PhotoCreditS/@Thehill

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி கடந்த 15-ம் தேதி ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. கால்பந்து போட்டியை நடத்தி முடித்தவுடன் அடுத்த நாளே பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் ரஷ்ய அதிபர் விளாமிர் புடின். இவர்களின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்ததாக ட்ரம்ப் புடினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். புடினும் அதன் நினைவாக ஒரு கால்பந்தை அமெரிக்க அதிபருக்குப் பரிசாக அளித்தார். இந்தப் பந்தை தன் மகனுக்கு விளையாடத் தர உள்ளதாக டரம்பும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்டே க்ரஹாம், “ட்ரம்புக்கு வழங்கப்பட்ட கால்பந்தில் ஏதேனும் உளவறியும் கருவி உள்ளதா என நன்கு சோதனை செய்ய வேண்டும். இதை வெள்ளை மாளிகைக்குள் எடுத்துச்செல்லக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிபருக்கு வரும் அனைத்துப் பரிசுகளையும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம், அதன் படி புதின் அளித்த கால்பந்தையும் உளவுத்துறையினர் சோதனை செய்துள்ளனர். இருப்பினும் லிண்டே க்ரஹாமின் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.