`வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்

வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு, நான் இரண்டாவது திருமணம் செய்ததுதான் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவரின் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்துக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாவதாக ஆன்மிக ஆலோசகரான புஷ்ரா மேனகா (வயது 40) என்பவரை இம்ரான் கான் மணந்தார். தற்போது இவர்கள் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இம்ரான் தனது திருமண வாழ்க்கை குறித்து செய்திச் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``பொதுவாக இரண்டாவது திருமணம் குறித்தும், ரேஹாம் கான் குறித்தும் வெளியில் பெரிதாக பேசியது இல்லை. எனது வாழ்க்கையில் சில தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், நான் செய்த மிகப்பெரிய தவறு இரண்டாவதாக ரேஹாம் கானை திருமணம் செய்ததுதான்." என்றார். 

மூன்றாவது திருமணம் குறித்து பேசிய அவர், ``மூன்றாவது மனைவி புஷ்ரா முகத்தை திருமணத்துக்கு முன்பு வரை நான் பார்க்கவில்லை. ஆன்மிக ஆலோசகர் என்பதால் என்னவோ அவர் எப்போதும் முகத்தை மூடியபடியே இருப்பார். ஆனால், அவர் வீட்டிலிருந்த அவரது ஒரு போட்டோவை வைத்து அவர் எப்படி  இருப்பார் எனக் கற்பனை செய்துகொண்டேன்" எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!