ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை -பெருகும் உலகத் தமிழர்களின் ஆதரவு 

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  தமிழ் இருக்கை அமைந்ததைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக்கத்திலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. 

பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழ் இருக்கை

இது தொடர்பான கூட்டம் இன்று(ஜூலை 23) ஹூஸ்டன் பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்றது. இதில் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் தமிழர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரன், பல்கலைக்கழக டீன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் நகரில் வசிக்கும் சாம் கண்ணப்பன், அப்பன், பெருமாள் அண்ணாமலை போன்ற தமிழர்களின் முயற்சியால், பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவுள்ளது.  இதற்கு ஆகும் மொத்த செலவான 60 லட்சம் டாலரில், சுமார் 30 லட்சம் டாலரை மாநில அரசே தந்து உதவும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் நடைபெற்ற கூட்டத்தில், ஏன் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டும். இதன் நோக்கம் என்ன? என்பன தொடர்பாக பல்கலைக்கழக டீனிடம் எடுத்துக் கூறப்பட்டது. 

பாலசந்திரனின் தமிழ் சேவைக்காகவும் நிர்வாகத் திறனுக்காகவும் ஹூஸ்டன்  நகர மேயர் பாராட்டு பத்திரம் பரிசளித்தார்.  அதில், “ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய சுயமாக எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் ஆட்சியராக இருந்தபோது அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க எடுத்த முயற்சிகள்” உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக பாலசந்திரனிடம் பேசினோம். அவர், ”ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்துப் பேசினோம். அனைத்து பல்கலைக்கழகத்திலும் தொன்மை குறித்து மட்டும் பேச வேண்டும் என்றில்லை. இன்றைய தமிழர்களின் வாழ்வில் உதவும் விதமாகத் தமிழ் இலக்கியத்தில் என்ன என்ன கூறுகள் உள்ளன என்பது குறித்து பேசவேண்டும். மேலும் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும், பொருளாதாரம், அரசியல், விவசாயம், மருத்துவம் முதலியவற்றை விளக்கும் விதமாகத் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!