`இன் மை ஃபீலிங்ஸ்’ சாலையில் சாகச விளையாட்டு: எச்சரிக்கும் காவல்துறை

ஹிப் ஹாப் பாடகர் ஒருவரின் பாட்டுக்கு அடிமையான ஸ்பெயின் மக்கள் சாலையில் ஈடுபடும் சாகச விளையாட்டை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். 

ஸ்பெயின்

Photo Credit: https://twitter.com/BTS_twt

ஹிப் ஹாப் சூப்பர்ஸ்டார் ட்ராக்கின் லேட்டஸ்ட் ஆல்பம்  ‘இன் மை ஃபீலிங்ஸ்’. இந்த ஆல்பம் ஸ்பெயின் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாட்டில் மயங்கிப்போன மக்கள் தற்போது சாலையில் செய்யும் சாகசங்களால் போலீஸாருக்கு தலைவலி உண்டாகியுள்ளது. அப்படி என்ன செய்கிறார்கள் என்கிறீர்களா?

சாலையில் கார்களில் செல்லும் மக்கள் இந்தப் பாட்டை தனது காரில் வைத்துவிட்டு ஓடும் காரில் இருந்து இறங்கி சாலையில் பாட்டுக்கு ஏற்றவாறு நடனமாட ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறியும் நடனமாடுகிறார்கள். இதை ட்விட்டரில்  #InmyFeelings மற்றும் #DoTheShiggy என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர். இந்த விநோதப் பழக்கம் ஸ்பெயின் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்துதான் மக்கள் இந்த விநோதப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். ஹாலிவுட் பிரபலம் வில் ஸ்மித் மற்றும் கால்பந்தாட்ட வீரர் மார்சிலோ ஆகியோர் #Inmyfeelings என்ற ஹேஷ்டேக்கில் சில நடன வீடியோக்களைப் பதிவிட்ட பின்னரே இது பரவத் தொடங்கியுள்ளது. வில் ஸ்மித் உயரமான கட்டடங்களின் மீது ஏறி நடனமாடி அதை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டிருந்தார். காரிலிருந்து இறங்கி சாகசங்கள் செய்யவில்லை. 

ஆனால், ஸ்பெயின் இளைஞர்கள் காரில் இருந்து இறங்கும் சாகசங்களை மேற்கொள்கின்றனர். பெண்களும் இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் சாலையில் உள்ள தடுப்புகளில் மோதுகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. முதலில் எச்சரிக்கை செய்த காவல்துறையினர் தற்போது கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மேலும், கடுமையான கண்டனத்தையும் காவல்துறையினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். சாலை பாதுகாப்பு ஒன்றும் விளையாட்டல்ல. கார்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணியாவிட்டாலும், வாகனத்தை ஓட்டும்போது மொபைல் போனில் ரெக்கார்டிங் செய்தாலோ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!