புத்த துறவிகளாக மாறிய தாய்லாந்துச் சிறுவர்கள்!

தாய்லாந்துக் குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும்,  ஒன்பது  நாள்கள் புத்த மடங்களில் தங்கி, தங்கள் பெற்றோர்களின் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். 

தாய்லாந்து

ஜூன் 23 -ம் நாளை யாராலும் மறக்க முடியாது. தாய்லாந்தைச் சேர்ந்த காட்டுப் பன்றி கால்பந்து அணி வீரர்கள், தங்களின் பயிற்சியாளருடன் குகைக்குள் சென்று உள்ளேயே மாட்டிக்கொண்ட நாள் அது. அதன் பிறகு, அடுத்த 20 நாள்களில் மொத்த ஊடகங்களும் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு மறுபிறவி அளித்துள்ளனர்,  உலக நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படை வீரர்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து திறமை வாய்ந்த பல கடற்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. 18 நாள்கள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஜூலை 10-ம் தேதி, குகையில் சிக்கிய அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியின்போது, தாய்லாந்து முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 

தாய்லாந்து

 மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். இந்த ஆண்டு நடைபெற்ற மீட்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த தாய்லாந்து குகை மீட்புப் பணிகள். சிறுவர்கள் மீட்கப்பட்டு பல நாள்கள் ஆகியும் இன்னும் மீட்புப்பணிகள் குறித்தும், சிறுவர்கள் குறித்தும், குகை குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குகையை அருங்காட்சியகமாக மாற்ற திட்டம், மீட்புப் பணிகளைத் திரைப்படமாக எடுக்கத் திட்டம் எனப் பல அறிவிப்புகள் வெளியாகின. மேலும், இந்தச் சம்பவத்தின் நினைவாக மிகப் பெரிய சுவர் ஓவியம் வரையப்பட்டது

தாய்லாந்து

இவற்றைத் தொடர்ந்து,  குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும், தங்கள் பயிற்சியாளருடன் ஒன்பது நாள்கள் புத்த மடத்தில் சேர்ந்து துறவிகளாகத் தங்க உள்ளனர். தாய்லாந்தில் புத்தமதம் மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சிறுவர்கள் குகையில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டால், துறவிகளாக  ஒன்பது நாள்கள் இருப்பார்கள் என அவர்களது பெற்றோர்கள் வேண்டியிருந்தனர். அந்த வேண்டுதலை ஏற்று, இன்றிலிருந்து இதைச் செய்ய உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!