சிறையில் நவாஸ்... முன்னணியில் இம்ரான் கான்... திணறும் பிலாவல்... பாகிஸ்தானில் வெற்றி யாருக்கு?!

நாளை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகள் எண்ணப்படுகின்றன. 27-ம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுவிடும். அடுத்த பிரதமர் யார் என்பது அப்போதுதான் தெரியும்.

சிறையில் நவாஸ்... முன்னணியில் இம்ரான் கான்... திணறும் பிலாவல்... பாகிஸ்தானில் வெற்றி யாருக்கு?!

பாகிஸ்தான் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஜூலை 25-ம் தேதி) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முட்டாஹிடா மஜ்லிஸ்-இ-அமல் (எம்.எம்.ஏ) கட்சி ஆகிய முக்கியக் கட்சிகள் களத்தில் உள்ளன. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 272 இடங்களுக்கு 3,459 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல 4 மாகாணச் சட்டமன்றங்களுக்கான தேர்தலில் 577 இடங்களுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதுவரை நடந்துள்ள பாகிஸ்தான் தேர்தல்களில் பஞ்சாப் மாகாண தேர்தல் முடிவுகள்தான் அந்நாட்டு ஆட்சி அதிகாரம் யார் கைக்குப் போக வேண்டும் என்பதை முடிவு செய்துவருகிறது. இங்கு, 95 இடங்கள் உள்ளன. இந்த மாகாணத்தில் நவாஸ் ஷெரீப் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள், "அவருக்கு இங்கு செல்வாக்கு குறையவில்லை'' என்று சொல்கிறார்கள். ஆனாலும், ஷெரீப் மீதான ஊழல் பிரச்னையை மையப்படுத்தி... இம்ரான் கான் கட்சி, வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது.

நவாஸ் ஷெரீப்: 

"பாகிஸ்தான் அரசியலில் தனிச் செல்வாக்கு மிக்க கட்சி என்ற பெருமையைப் பல ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது நவாஸ் ஷெரீப்பின் 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி'. ராணுவ சர்வாதிகாரியான ஜியா உல் ஹக்கின் ஆதரவாளர் நவாஸ் ஷெரீப் என்ற குற்றச்சாட்டு அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது. 1981ஆம் ஆண்டு ஜியா உல் ஹக்கின் ஆதரவில்தான் நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார் என்று சொல்லப்படுவதும் உண்டு. 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிளவுபட்டு நவாஸின் புதிய முஸ்லிம் லீக் கட்சி உருவானது. அந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நவாஸ் ஷெரீப், 1999ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தார். பின், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர், 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, நாடு கடத்தல் முடிவுக்கு வந்தது. இப்போது, ஊழல் குற்றச்சாட்டில் ஆட்சியைப் பறிகொடுத்த நவாஸ், லண்டனில் தஞ்சம் புகுந்திருந்தார். 

பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான் கான்

இம்ரான் கான்: 

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை 1996ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தொடங்கினார். `மாற்றம்' என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அரசியலில் ஈடுபட்ட அவர், தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இருந்தாலும், இப்போது அவரது கட்சிக்கு மக்கள் செல்வாக்கு பெருகியிருக்கிறது. அந்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நவாஸ் ஆட்சிக் காலத்தில் ஆட்சி அவலங்களை முன்வைத்து இம்ரான் கான் நடத்திய போராட்டங்கள், அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தன. இந்தத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி வருகின்றன.

பிலாவால் பூட்டோ: 

பாகிஸ்தானில் 1967-ம் ஆண்டு ஜூல்பிகர் அலி பூட்டோவால் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.  ஜூல்பிகர் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, கட்சித் தலைமைப் பொறுப்பை பெனாசிர் பூட்டோ ஏற்றார். 1988, 1993-ம் ஆண்டுகளில் பெனாசிர் பூட்டோ ஆட்சி இருந்தது. 2008-ம் ஆண்டு அவர், படுகொலை செய்யப்பட்டார்.

பிலாவால் பூட்டோ

அவருக்குப் பின் அவருடைய மகன் பிலாவால் பூட்டோ, அக்கட்சியை நடத்திவருகிறார். சிந்து மாகாணம் பகுதியில் இந்தக் கட்சி வலுவாகவே உள்ளது. ஆனாலும், இப்போது அந்தக் கட்சியை வழிநடத்த அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இல்லை என்ற குறை உள்ளது. நாடு முழுவதும் பிலாவால் பூட்டோ, தேர்தல் பிரசாரம் செய்தாலும் ஆதரவு பெரிய அளவில் இல்லை.

ஜெயிக்கப்போவது யார்?

இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தீவிர தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். ஊழல் காரணமாக 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் லண்டனிலிருந்து திரும்பினார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரும், அவருடைய மகள் மரியமும் இப்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால், நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபஸ் ஷெரீப், பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இம்ரான் கான் கட்சிக்கு ஆதரவாக அந்நாட்டு ராணுவம் செயல்படுவதாக அங்குள்ள கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. அதை, இம்ரான் கான் மறுத்துள்ளார். யாருக்கும் தங்களுடைய ஆதரவு இல்லை என்று ராணுவமும் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் கருத்துக்கணிப்புகளும் இம்ரான் கானுக்கு ஆதரவாகவே கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆனால், அவரால் நவாஸ் ஷெரீப் கட்சியை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது என்பதுதான் அங்குள்ள கள நிலவரம். மொத்தமுள்ள 272 உறுப்பினர்களில், பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்பது கடந்தகால வரலாறு. இந்தப் பஞ்சாப் மாகாணம் நவாஸ் கோட்டையாகவே இன்றளவும் உள்ளது. லண்டனில் இருந்து நவாஸ் திரும்பியது அவரது கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

பெனாசிர் பூட்டோ மகன் பிலாவால் பூட்டோ செய்துள்ள தேர்தல் பிரசாரம் பாகிஸ்தான் மக்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெறவில்லை. இவர்களுக்கிடையே, சில பயங்கரவாத அமைப்புகளும் களத்தில் உள்ளன. ஊழல், வாரிசு அரசியலை எதிர்த்து சில சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி போடுகிறார்கள். தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே கடைசி வாரத்தில் நடந்த வன்முறை, குண்டுவெடிப்புகளில் மூன்று வேட்பாளர்கள் உள்பட 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாளை (25-ம் தேதி) நடக்கும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 3.75 லட்சம் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகள் எண்ணப்படுகின்றன. 27-ம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுவிடும். அடுத்த பிரதமர் யார் என்பது அப்போதுதான் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!