வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (25/07/2018)

கடைசி தொடர்பு:11:10 (25/07/2018)

`தங்களுக்கான உணவைத் தாங்களே உருவாக்கும் யானைகள்!' - இயற்கையின் அதிசயம்

ப்ளாட்டிமித்ரா மேக்ரோகார்பா பழங்களை ஆசிய யானைகள், கடமான்கள், கரடிகள் மற்றும் குரங்குகள் போன்றவை அதிக அளவில் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

`தங்களுக்கான உணவைத் தாங்களே உருவாக்கும் யானைகள்!' - இயற்கையின் அதிசயம்

சில குறிப்பிட்ட மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியானது விலங்குகளின் வாழ்வாதாரத்தோடு தொடர்பு கொண்டிருக்கும். அதனால் பல விலங்குகள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான தாவரங்களை தானே பரப்பிக்கொள்ளும். அந்த வகையில் சமீபத்திய ஆய்வின்படி, `தாய்லாந்தில் சில குறிப்பிட்ட மரத்தின் விதைகளைப் பரப்புவதில் யானைகளுக்குப் பெரும் பங்கு உண்டு' என்று தெரியவந்துள்ளது. 

விதைகளை பரப்பும் யானைகள்

ப்ளோஸ் ஒன் (PLOS ONE) என்ற பத்திரிகை தகவலின்படி, தாய்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இணைந்து விலங்குகள் பரப்பும் தாவரங்களைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். இதில் பழம் நுகர்வு, விதைச் சிதைவு மற்றும் விதை முளைக்கும் திறன் ஆகிய காரணிகள் அதிகமாக ஆய்வு செய்யப்பட்டன. மேற்கண்ட காரணிகள் அனைத்தும் சப்போட்டா குடும்பத்தைச் சேர்ந்த ப்ளாட்டிமித்ரா மேக்ரோகார்பா (Platymitra macrocarpa) என்ற பழத்தின் விதைகளுடன் ஒத்துப்போனது. இந்தப் பழங்களின் விதைகள் அதிகமான அளவில் பரவியிருந்ததும், இதன் விதைகள் அதிகமாக முளைப்புத் திறனைக் கொண்டிருந்ததும்தான் அதற்கு முக்கியமான காரணம். 

 ப்ளாட்டிமித்ரா மேக்ரோகார்பா பழங்களை ஆசிய யானைகள், கடமான்கள், கரடிகள் மற்றும் குரங்குகள் போன்றவை அதிக அளவில் உணவாக எடுத்துக்கொள்கின்றன. அவ்வாறு விலங்குகள் எடுத்துக்கொள்வது விலங்குகளுக்கும், பழ மரங்களுக்கும் உதவும். விலங்குகளும், மரங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கக் கூடியது. இப்படிப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் அம்மரத்தின் விதைகளைப் பல புதிய இடங்களுக்குப் பரப்புகிறது. பெரிய விலங்குகளின் மூலம் பரவும் விதைகளுக்கு விலங்குகளின் சாணம் உரமாக இருக்கிறது.  இந்த விதைகள் 78 சதவிகிதம் முளைப்புத் திறனைக் கொண்டிருக்கும். ஆனால் ஆராய்ச்சியாளர்களின் தகவல்படி, `ஒரு விலங்கானது அதை உண்ணும் பழங்களின் அளவை மட்டுமே வைத்து விதைப் பரவல் அதிகமாகிறது என்று சொல்லிவிட முடியாது. காடுகளில் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்துப் பார்க்கும்போது, யானை மூன்று சதவிகிதம் அளவு பழங்களை எடுத்துக் கொண்டாலும், 37 சதவிகித விதைகளைப் பரப்புகிறது. கடமான்கள் அதிக அளவில் ப்ளாட்டிமித்ரா மேக்ரோகார்பா பழங்களை எடுத்துக்கொண்டு 17 சதவிகித விதைகளைப் பரப்புகிறது. கரடிகள் மற்றும் குரங்குகள் இரண்டும் யானை, கடமான் ஆகிய இரண்டு விலங்குகளுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் விதைப் பரப்பலை மேற்கொள்கிறது. விதைப் பரவலில் யானைகள்தாம் முன்னணியில் இருக்கிறது. கடமான்கள் பரப்பும் விதைகள் அதிகமாக வண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதனால் அவற்றின் விதைப்பரவல் குறைந்திருக்கலாம். 

காடு

ஒவ்வொரு விலங்கும் விதைப் பரவலுக்காக ஒவ்வொரு யுக்தியைக் கையாள்கின்றன. கரடி, கடமான், நீண்ட கைகளுடைய குரங்குகள் ஆகியவை மொத்தமாகப் பரப்பும் விதைகளும், யானை பரப்பும் விதைகளின் அளவும் ஒரே எண்ணிக்கையில் இருக்கும். யானைகளின் எண்ணிக்கை அதிகமானால், இத்தாவரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். யானைகளின் எண்ணிக்கை குறைவானது, இம்மர விதைகளின் பரவுதலை நிச்சயமாகப் பாதிக்கும். தாய்லாந்து மழைக்காடுகளில் பெரு விலங்குகளான யானைகளும், காண்டாமிருகங்களும் ப்ளாட்டிமித்ரா மேக்ரோகார்பா பழங்களை எடுத்துக்கொள்ளும். அதில் காண்டாமிருகங்கள் பொதுவாகக் கிடைத்ததை உணவாக எடுத்துக்கொள்ளும் வகையைச் சார்ந்தது. ஆனால், யானை மேக்ரோகார்பா பழ வகைகளை விரும்பி உண்ணக் கூடியது. இவற்றிலும் பெரும்பாலான விதைப் பரவல் யானை மூலமாக நிகழ்கின்றன. 

இந்தியாவில் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள பன்னாட்டு ஆய்வாளரும், தாய்லாந்தின் பயோடெக் (BIOTEC) என்கிற ஆய்வகத்தின் ஆசிரியருமான கிம் மெக்கோன்கி, ``கார்பன் சுத்தமாக்குவதற்கும், புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கும், விலங்குகளின் விதைப் பரவலை வைத்துக் காடுகளின் தன்மையை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் காடுகளை இயற்கையின் போக்கில் உருவாக்க முடியும்" என்கிறார்.