தற்கொலைப்படைத் தாக்குதலில் 29 வாக்காளர்கள் பலி! - களேபரமான பாகிஸ்தான் தேர்தல் | At least 29 killed in blast near Pakistan polling station

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (25/07/2018)

கடைசி தொடர்பு:14:58 (25/07/2018)

தற்கொலைப்படைத் தாக்குதலில் 29 வாக்காளர்கள் பலி! - களேபரமான பாகிஸ்தான் தேர்தல்

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் குவெட்டா நகரில் வாக்குச்சாவடி அருகில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

பாகிஸ்தான் தேர்தல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கும் சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் ஆகிய 4 மாகாணங்களுக்கும் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 85 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் காலையில் இருந்தே வாக்களித்து வந்தனர். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துள்ளது. இத்தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்கள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான்
 

இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொதுத்தேர்தல் நடைபெறும் வேளையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துள்ள இத்தாக்குதல் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கைபர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் இம்ரான் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் பலியாகினர்.