வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (25/07/2018)

கடைசி தொடர்பு:18:43 (25/07/2018)

பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் டாப் 10 பரபரப்புகள்!

இப்போதுள்ள, நிலவரப்படி, நவாஸ் கட்சிக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் இம்ரான் கான் கட்சியே முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் டாப் 10 பரபரப்புகள்!

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதுகுறித்த சில தகவல்களை இங்கே காண்போம்.

* பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக வாக்காளர்கள், காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாகிஸ்தானில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* 10 கோடியே 59 லட்சம் (105.95 மில்லியன்) வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடத் தகுதி பெற்றுள்ளவர்களாகப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3,71,388 ராணுவ வீரர்கள் உட்பட 8,00,000 பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்

* ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்,  காலை 8 மணிக்கு முதல் ஆளாக வந்து லாகூர், மாடல் டவுன் வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப் போட்டார். அப்போது, நிருபர்களிடம் பேசிய நவாஸ், ``அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்; ஓட்டுப் போடுங்கள்'' என்று அழைப்புவிடுத்தார். 

* முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பி.எம்.எல்.), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.), முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆகிய கட்சிகள்தாம் இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மும்பைத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஹபீஸ் சயித்தின் ஜமாத் உத் தவா கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.

* மொத்தம் 8,508 இடங்களில் 2,44,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 40,632 வாக்குச்சாவடிகள் இருபாலருக்கும் பொதுவானவை. 23,104 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டன. 17,007 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டன. இங்கு, ராணுவப் பாதுகாப்பு கூடுதலாகப் போடப்பட்டது. 

* பச்சை, வெள்ளை என்று இரண்டு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் இருந்தன. இதில், பச்சை வண்ணத்தில் உள்ள தாள், நாடாளுமன்றத் தேர்தலுக்கானது; வெள்ளை நிறத் தாள், மாகாண வேட்பாளர்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 11,673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 3,428 பேர் நாடாளுமன்ற வேட்பாளர்கள்; 8,245 பேர் மாகாண வேட்பாளர்கள். இதில், 5,661 பேர், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள். 6,012 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். 

* மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,59,55,409. இதில் ஆண்கள் 5,92,22,927, பெண்கள் 4,67,30,569. மூன்றாம் பாலினத்தவர் 1,913. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 1,356 பேர் உள்ளனர். 1,74,43,094 வாக்காளர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இது, மொத்த வாக்காளர்களில் 10 சதவிகிதம். 2,15,527 மாற்றுத் திறனாளி வாக்காளர்களில் 52,432 பேர் பெண்கள். 33,62,016 வாக்காளர்கள் மதச் சிறுபான்மையினராக உள்ளார்கள். இவர்களில் 18,64,800 பேர் ஆண்கள். 14,97,216 பேர் பெண்கள்.

இம்ரான் கான்

* நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 342 சீட்களில் 272 சீட்களுக்கு மட்டுமே நேரடித் தேர்தல். 70 சீட்கள் மதச் சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளன. 5 சதவிகிதத்துக்கு அதிகமான ஓட்டுகளை வாங்கும் கட்சிகள், `விகிதாசார பிரதிநிதித்துவம்' என்ற அடிப்படையில் தங்கள் கட்சியினரை இந்த 70 இடங்களுக்கு அனுப்புவார்கள். தேர்தல் நடைபெறும் 272 சீட்களில், 137 இடங்களையோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களையோ கைப்பற்றும் கட்சியோ, கூட்டணியோ பிரதமரைத் தேர்வு செய்து ஆட்சி அமைக்கும். 

* இதுவரை பாகிஸ்தானின் 70 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் தங்களது ஐந்தாண்டுப் பதவிக்காலத்தை முழுமையாக  ஆட்சிக் கட்டிலில் இருந்து நிறைவு செய்தது இல்லை. அதுபோல, ஆட்சி முடியும்போது, ராணுவமோ அல்லது ராணுவ உயர் அதிகாரிகளோ அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவார்கள். ஆனால், இந்த முறைதான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஆட்சி முடிந்து அடுத்த பொதுத்தேர்தல் நடக்கிறது. 

* தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு, மோதல் போன்றவைகளால் மூன்று வேட்பாளர்கள் உட்பட 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். இதில் இரண்டு போலீஸாரும் அடங்குவர். 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 27-ம் தேதிக்குள் புதிய பிரதமர் பதவி ஏற்பார். இப்போதுள்ள, நிலவரப்படி, நவாஸ் கட்சிக்கும் இம்ரான் கான் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும் இம்ரான் கான் கட்சியே முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்