நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணமும் ஜாக்பாட்டாய் தெரியும் செவ்வாய் கிரகமும்! #MustKnowFacts

ஜூலை 27 அன்று நிலவு செவ்வாய்க்கு மிக அருகில் செல்லும். அன்றைய இரவு நிலவுக்கு மிக அருகில் செவ்வாய் தெரியும்.

நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணமும் ஜாக்பாட்டாய் தெரியும் செவ்வாய் கிரகமும்! #MustKnowFacts

கிரகணம்: 

சூரியன், பூமி, சந்திரன் இவை ஒன்றின் நிழலில் ஒன்று மறைந்து கண்ணாமூச்சி ஆடுவதே கிரகணம். எதன் மீது நிழல் விழுந்து அதன் வடிவம் மறைந்து விரிகிறதோ அதன் பெயரில் கிரகணம் அமையும். 

சூரியன்- பூமி- சந்திரன் நேர்க்கோட்டில் நின்று, பூமியின் நிழலுள் சந்திரன் மறைந்து விலகும் விளையாட்டு சந்திர கிரகணம் எனப்படும்.

சூரியன்- சந்திரன்-பூமி என்று வரிசைப்படுத்தி சந்திரன் சூரிய ஒளியைப் பூமிக்கு மறைக்க முயன்றால் அது சூரிய கிரகணம்.

சந்திர கிரகணம்

சந்திர கிரகண நேரம்:

சூரியன் ஒளி பூமியில் பட்டு அதன் நிழல் பூமிக்குப் பின்னால் விழும். அந்த நிழல் பாதையில் நிலவு கடந்து வரும் காலம்தான் கிரகண நேரம். மேலும் அந்த நிழல் அடர்த்தியின் போக்கில் மூன்று வகையான நேரம் குறிக்கப்படுவது உண்டு. 

மெல்லிய நிழல் பகுதிக்குள் நுழைவது (partial eclipse) முதல் விலகுவது வரை உள்ள மொத்த கால அளவு.

பூமியின் நிழல் பரவி நிற்கும் முழு நீளத்தையும் கடந்து வரும் காலம். இது மொத்த கிரகண (total eclipse) நேரம் எனப்படும். அதாவது மெல்லிய கீற்றாய் மறையத் தொடங்கி பிறையாய் மாறி, முழுதும் மறைந்து மீண்டும் நிழல் விலகி முழு நிலவு வெளிப்படும் கால அளவு.

சரியாக பூமியின் கோள நிழல் நிலவில் விழுந்து ஏற்படும் முழு கிரகண (greater eclipse) நேரம்.

ஆய்வின் படி முழு அளவில் கிரகணம் நிகழும் காலம் (maximum time of full eclipse) அதிக பட்சமாக 1 மணி நேரம் 47 நிமிடங்கள்தாம். கிட்டத்தட்ட அதை நெருங்கிய கால அளவே பதிவானது ஜூலை 16, 2000. அன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் கால அளவு 1 மணிநேரம் 46.4 நிமிடம். இதுதான் 20-ம் நூற்றாண்டின் மிகநீண்ட கிரகணம்.

21- ம் நூற்றாண்டின் மிகநீண்ட கிரகணம் 27 ஜூலை 2018-ல் நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, 1 மணி நேரம் 42 நிமிடம் 57 நொடிகள் நிகழும் எனக் கணித்துள்ளனர். 

21-ம் நூற்றாண்டின் மிகக்குறுகிய கிரகணம் நிகழ்ந்தது ஏப்ரல் 4, 2015. அது வெறும் 4 நிமிடம் 48 நொடி மட்டுமே.

இந்தக் கால அளவு மாற்றத்துக்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று பூமி - சந்திரன் இடையிலான தூரம். மற்றொன்று, நிழலில் கடந்து போகும் பகுதி. நிழலின் மேல் பகுதியோ கீழ்ப்பகுதியோ கடக்க காலம் குறைவாகவே பிடிக்கும். ஜனவரி 31, 2018 அன்று நிகழ்ந்தது நிழலின் மேற்பகுதியைக் கடந்தது.


27 ஜூலை 2018 அன்று…

இந்தக் கிரகணம் பூமியின் கிழக்கு அரைக்கோளம் நோக்கி இருப்பதால் இதை வட அமெரிக்கர்கள் காண்பது கடினம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மக்களால்தாம் இதைக் கண்டு ரசிக்க முடியும். தென் அமெரிக்கர்கள்கூட இதன் இறுதிக் கட்டத்தை 28-ம் தேதி காலை சூரிய உதயத்தின் போது பார்க்க சில வாய்ப்புகள் உள்ளன. 27 மாலை சூரியன் மறையும் போது நியூஸிலாந்து நாட்டின் பக்கம் உள்ள மக்களால் இந்தக் கிரகணத்தின் தொடக்கத்தைப் பார்க்க முடியும். 

முழுச் சந்திர கிரகணம் நிகழ்வதை மடகாஸ்கர் மக்களால் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆசிய , ஐரோப்பியா, ஆப்பிரிக்க மக்களால் முழுதாக ரசிக்க முடியக்கூடிய கிரகணம் இதுவாக அமையும்.  

பகுதி கிரகணம்( Partial eclipse) 27 ஜூலை 18:24  UTC (இந்திய நேரம் 27 ஜூலை இரவு 11 : 54) ல் தொடங்குகிறது.

முழுக் கிரகணம் ( total eclipse) 27 ஜூலை 19:30  UTC (இந்திய நேரம் 28 ஜூலை 1:00) தொடங்குகிறது.

சிறந்த கிரகணம் ( Greater eclipse) 27 ம் தேதி 20:22  UTC (இந்திய நேரம் 28-ம் தேதி 1:52) நிகழ்கிறது

முழுக் கிரகணம் 21:13  UTC (இ. நே. 28 ஜூலை 02:43) ல் முடிகிறது.

பிற்பாதி கிரகணம் 22:19  UTC (இ.நே 28 ஜூலை 03:49) க்கு முடிகிறது.

கிரகணம் தொடங்கி முடிய 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும்.

 

 

via GIPHY


இரட்டிப்பு விருந்து:

இந்தக் கிரகணம் நீண்டு நிகழக் காரணம் நிலவு நம்மை விடத் தொலைவில் இருக்கும். இதை அப்போஜி( Apogee) நிலை என்று சொல்வார்கள். இதனால் நிலவின் அளவு சிறிதாகத் தெரியும். சிறிய உருவம் பெரிய நிழலைக் கடக்க காலம் எடுக்கும் அல்லவா?

இந்த ஆண்டின் மிகச்சிறிய முழுநிலவு ஜூலை 27 அன்றுதான் தெரியப்போகிறது.

இதே தூரத்தின் காரணமாக இன்னொரு நிகழ்வும் நமக்கு விருந்து. ஜூலை 27 அன்று நிலவு செவ்வாய்க்கு மிக அருகில் செல்லும். அன்றைய இரவு நிலவுக்கு மிக அருகில் செவ்வாய் தெரியும். இது மட்டுமன்றி 2003 ல் இருந்து  சூரியன்- பூமி- செவ்வாய் சரியான நேர்கோட்டில் நிற்கும் நிகழ்வும் அன்றுதான் நிகழ உள்ளது.

ஒன்று கவனித்தீரா? இரண்டு நீண்ட கிரகணமும் நிகழ்ந்தது ஜூலை மாதத்தில்தான். அதற்குக் காரணம் இந்தத் தூரம்தான். ஜூலையில்தான் சூரியனை விட்டு பூமியும் விலகி நிற்குமாம்.

சூரியன் - பூமி - சந்திரன் - செவ்வாய் எல்லாம் ஒரே நேர்கோட்டில் நிற்கும் நாள் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் விருந்து தானே? நமக்கும் இந்த ஜூலை 27 - 28 வானில் விருந்துதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!