வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (30/07/2018)

கடைசி தொடர்பு:18:07 (30/07/2018)

இந்திய மாணவர் கொலைக்குக் காரணமான டேட்டிங் நட்பு!- ஆஸ்திரேலியாவில் நடந்த கொடுமை

ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர் அடித்துக்கொலைசெய்யப்பட்ட வழக்கில், 19 வயது பெண்ணை ஆஸ்திரேலியா போலீஸ் கைது செய்துள்ளது. 

இந்திய மாணவர்

ஆஸ்திரேலியாவில் படித்துவந்த இந்தியாவைச் சேர்ந்த  மௌலின் ரத்தோட், கடந்த திங்கள்கிழமை இறந்துவிட்டதாகத் தகவல்வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், தன் மகனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம்  கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, மெளலின் கொலை செய்யப்பட்ட பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.  மெளலினுக்கு டேட்டிங் ஆப் மூலம் 19 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. `உன்னை நேரில் பார்க்க வேண்டும்' என்று கூறிய மெளலின், தன் வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண், மெளலின் வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில், மெளலின் வீட்டில் படுகாயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய போலீஸ். எதற்காக மெளலினைத்  தாக்கினார் என்று நீதிமன்றத்தில் அவர் சொல்லவேயில்லை. இதனால், அவரின் காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா பெண் ஒருவர் இந்திய மாணவர்மீது  தாக்குதல் நடத்திக் கொலைசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.