அமேசான் காட்டில் தன்னந்தனியாக 20 வருட வாழ்க்கை! பிரமிக்கவைக்கும் கடைசி இன மனிதர்

பிரேஸில் நாட்டில் உள்ள ரோண்டோனியா பகுதியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்துள்ளார்.

பிரேசில்

உங்கள் மொழியைப் பேசுவதற்கு நீங்கள்தான் கடைசி நபர். உங்களுக்கும் வெளி உலகத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு தீவு ஒன்றில் தனித்து விடப்பட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் காடுதான் உங்கள் வீடு. அங்கு கிடைப்பவைதான் உங்கள் உணவு குழிகள்தான் உங்கள் வசிப்பிடம். இந்தச் சூழலில் நீங்கள் இருக்க முடியுமா? 

ஆம், இப்படி ஒரு சூழலில்தான் பிரேஸிலில் உள்ள ரோண்டோனியாவில் ( Rondonia), பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமேசான் காடுகளில் தன்னந்தனியாக வசித்து வருகிறார். 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுகொண்ட அந்தக் காட்டில், கடந்த 20 வருடங்களாக தன்னந்தனியாக வசித்துவருகிறார். இவர், 1950-60-களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருப்பார் என மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவருடன் இருந்த மற்ற பழங்குடியின மக்களை கிராம வாசிகள் கொலை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, தற்போது காட்டில் தனியாக வசித்துவருகிறார்.  காடுகளையும் தன் முயற்சியால் சீர்படுத்திவருகிறார். சோளம் மற்றும் பப்பாளி விளைவித்து வருகிறார். தான் வைத்திருக்கும் கோடரியைக்கொண்டு மரம் வெட்டுகிறார். இதன்மூலம், விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்கிறார். நிலத்தில் குழிகளை  வெட்டிவைத்து, விலங்குகளை வேட்டையாடுகிறார். தன் வாழ்விடமாக அந்தக் குழிகளையே பயன்படுத்துகிறார்.  ஆறு அடியில் இந்தக் குழிகள் அமைந்துள்ளன. இந்தக் குழிகளை மனிதர்களிடமிருந்து தப்பித்து பதுங்கிக்கொள்வதற்காகப் பயன்படுத்துகிறார். தான் பேசும் ஒரு மொழி, தன்னைத் தவிர வேறு யாருக்கும் அறியாதபோது, அவரால் என்ன செய்ய முடியும். 

பழங்குடியினர்

அந்த நபர் குறித்த வீடியோ பதிவை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த வீடியோவும் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவே, 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது என்கின்றனர். தற்போது, இவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை பிரேஸில் அரசு மேற்கொண்டுள்ளது. இவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரேஸிலில் உள்ள சர்வதேச இந்தியத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

'அமேசான் பகுதியில் வசிக்கும் இந்தப் பழங்குடிகள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.தொடர்புகொள்ள இயலாத இந்தப் பழங்குடிகளைப்  பாதுகாப்பது அரசுக்கு சவாலான பணியாக இருக்கிறது' என்கிறார்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!