வெளிநாட்டுக்குச் செல்கிறீர்களா - முன்னாள் தூதரக அதிகாரி கூறும் அட்வைஸ்!

சிரியா, ஆப்கானிஸ்தான், பூடான் போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவரிடம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினோம் 

வெளிநாட்டுக்குச் செல்கிறீர்களா - முன்னாள் தூதரக அதிகாரி கூறும் அட்வைஸ்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்  இந்திய வெளிவிவகாரத் துறை சார்பாக நடத்தப் பெறும் அறிஞர்களின் சிறப்புப் சொற்பொழிவு வரிசையில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு என்கிற தலைப்பில் பூடான் மற்றும் சிரியா நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் திரு.வி.பி.கரன் ஐ.எஃப்.எஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். சிரியா, ஆப்கானிஸ்தான், பூடான் போன்ற நாடுகளுக்கான இந்திய தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவரிடம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசினோம் 

``சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பணியாற்றிய உங்களது அனுபவம்?"

``பெரும்பாலும் உலக மீடியாக்களில் வருகின்ற செய்திகளே அந்நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்துகின்றன. ஆனால், அதில் சிலநேரங்களில் போலி செய்திகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. உண்மையை அறிவது சிக்கலான ஒன்று. பாதுகாப்பின்மை ரொம்பப் பெரிய பிரச்னை. தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை சோர்வடைய விடாமல் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அங்கு நடைபெறுகிற செய்திகளை ஆராய்ந்து டெல்லிக்கு அனுப்பிக்கொண்டே இருப்போம். இந்தியாவிலிருந்து நிர்வாக அதிகாரிகள் பார்வையிட வரும் போது அவர்களுக்கான வழிகாட்டுதல்களை செய்து கொடுப்போம்."

``வெளிநாடுகள் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும்?"

``இந்தியர்கள் சிக்கலில் இருப்பது தெரிய வந்தால் அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அந்நாட்டின் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க முயற்சி செய்வோம். என்னுடைய அனுபவத்தில் சிரியாவில் பணியாற்றிய போது சர்க்கரை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இந்தியரை மீட்க பெரும் முயற்சி எடுத்தோம், இத்தனைக்கும் அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. பெரும் முயற்சிக்குப் பிறகு அவரை மீட்டோம்."

தூதரக அதிகாரி

``வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?"

``முதலில், அவர்கள் இந்தியாவில் இல்லை, வெளிநாட்டில் வசிக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு விருப்பமோ இல்லையோ அந்நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும். இரண்டாவதாக அந்நாட்டின் மொழி, கலாசாரம் போன்றவற்றை ஓரளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்பு கொள்வதில் (Communication) உள்ள சிக்கல் - பிரச்னைக்குக் காரணமாகி விடுகிறது. மூன்றாவது தன்னுடைய நண்பர்கள் போன்றோரிடம் அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன வேலைக்காக என்பதை தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அது நிச்சயம் உதவும். எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் இந்திய தூதரகத்தைத் தொலைபேசி மூலமாகக் கூட அணுகலாம். இந்திய தூதரகத்தில் அவர்களின்  விவரங்களை பதிவு செய்திருந்தால் நாங்கள் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். ஏதாவது உள்நாட்டுப் போர் போன்ற சிக்கல்கள் ஏற்படும் போது நாங்க முதலில் தேடுவது அந்தப் பகுதியில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்பதைத்தான்."

``உங்கள் பணியில் சந்தித்த சவால்கள் என்ன?"

``ஆப்கானிஸ்தான், காத்மாண்டு, கொழும்பு, சிரியா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றியிருக்கிறேன். சிரியாவில் பணியாற்றும் போது தினம் தினம் குண்டுவெடிப்புகள் போன்றவற்றைச் சந்திக்க நேர்ந்தது. தூதரகத்தில் நீங்கள் பணியாற்றினால் முதலில் சந்திக்கும் பிரச்னை பாதுகாப்பின்மை. அரசாங்கம் ஆதரவு அளித்தாலும் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் திறமை இருக்க வேண்டும். இரண்டாவது சவால் அலுவலகப் பணியாளர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். மூன்றாவது அந்நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்குச் சிக்கலான சூழலில் உதவுவது. சில நேரங்களில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சிலர் பிரச்னையைச் சந்தித்திருப்பார்கள். அவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடைமை."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!