வாவ்... 3,280 அடி உயரத்தில் பாலத்தை தாங்கி நிற்கும் ராட்சத கைகள்! #AmazingVideo

வியட்நாமில் பானா மலைப்பகுதியில் காற்றில் மிதக்கும் நீளமான தங்கப் பாலத்தை இரண்டு ராட்சதக் கைகள் தாங்கிப்பிடிக்கிறது... புரியவில்லையா.. முதலில் இந்த வீடியோவை பாருங்கள்.. 


வீடியோவில் இருக்கும் இந்த ரம்மியமான பாலம் வியட்நாமில் அமைந்துள்ளது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்,  `இதைப் பார்க்கும்போது மலைகளுக்குத்தான் கைகள் முளைத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.’ `வானத்தில் மிதப்பதுபோல் உணர்கிறேன்’  ‘இதன் அழகு என்னை தலைசுற்ற வைக்கிறது’ என்று வர்ணிக்கின்றனர். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பாலத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் அவர்கள் தூண்டுகின்றனர். தங்கப் பாலத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

 வியட்நாம் தங்கப் பாலம்
 

மத்திய வியட்நாமில் உள்ள கடற்கரை நகரமான டனாங் (Danang) அருகே இயற்கை எழில் கொஞ்சும் பானா (Ba na) மலைப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 1919-ம் ஆண்டு பிரெஞ்சு காலனித்துவ காலகட்டத்தில் மலை நகரம் உருவாக்கப்பட்டு, பாலமும்  கட்டப்பட்டது. அந்தப் பாலம்தான் தற்போது தங்கப் பாலமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. 150 மீட்டர் நீளமுடைய இந்தப் பிரமாண்ட பாலம், கடல்மட்டத்துக்கு மேலே சுமார் 3,280 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோல்டன் பாலத்தை ராட்சத கைகள் தாங்குவதுபோல் வடிவமைக்கப்பட்டதுதான் இதன் ஹைலைட். இந்தப் பாலம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கோல்டன் பாலத்தை மறுவடிவமைத்தவருக்கு ஹேட்ஸ் ஆஃப். 

கோல்டன் பாலம்
 

இந்தப் பாலம் வியட்நாமில் `Cau Vang’ என்று அழைக்கப்படுகிறது. `Cau Vang’  என்றால் தங்கப் பாலம் என்று பொருள். தங்கப் பாலம் அமைந்துள்ள மலைப்பகுதியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பிரெஞ்சு விடுமுறை விடுதிகளும் உள்ளன. 1,000 அடி உயரத்தில் கேபிள் கார் பயணம், மர வீடுகள் என அங்கு செல்பவர்களுக்கு கண்டுகளிக்க நிறைய இடங்கள் உள்ளன.

வியட்நாம் மிகதொலைவில் எல்லாம் இல்லை.. தென்கிழக்கு ஆசிய நாடுதான். சுற்றுலா செல்ல தயாரா?   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!