தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து இலங்கை பிரதமர் நலம் விசாரிப்பு!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து,ஸ்டாலினை தொலைபேசியில்  தொடர்புகொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கேட்டறிந்தார்.

இலங்கை பிரதமர்


தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாகவே வயது முதிர்வு மற்றும் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி அவருக்கு ஏற்பட்ட திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல கருணாநிதியின் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் வகையிலும், தொண்டர்களிடையே பதற்றத்தைக் குறைக்கும் வகையிலும், காவேரி மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதும், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதேபோல அண்டை மாநில முதல்வர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தனர். திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இலங்கை அதிபர் சிறிசேனா, கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற  கடிதம் முழுவதும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே , தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதேபோல கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா நாளை  சென்னை வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!