வெளியிடப்பட்ட நேரம்: 02:33 (03/08/2018)

கடைசி தொடர்பு:02:52 (03/08/2018)

1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்த ஆப்பிள்!

ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் எட்டியது. கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் ஆப்பிள், அமேசான், ஆல்ஃபாபெட் நிறுவனங்களுக்கிடையே யார் முதலில் ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டுவது என்ற போட்டி நிலவிவந்தது. இதில் அமேசானுக்கும் ஆப்பிளுக்குமிடையேதான் போட்டி வலுவாக இருந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆப்பிள்

கணினி அறிமுகமான காலத்திலிருந்தே ஆப்பிள் நிறுவனம் தனது தனித்தன்மையை நிரூபித்து வருகின்றது. ஆப்பிள் ஐபோன், ஐமேக் கணினி, ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி என ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய முயற்சியும் புதுமை கலந்ததாகவே இருக்கும் என்பதே அந்நிறுவனத்தின் சிறப்பு. 

விண்டோஸ் கணினிக்குப் போட்டியாக ஆப்பிள் கணினிகளும் விற்பனையில் சாதனை படைத்தன. அடுத்ததாக செல்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்புகளை முடுக்கிவிட்டது. ஆண்ட்ராய்டு போன்களின்மீதான மோகம் உலக மக்களை ஆட்டிப்படைத்தாலும் ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கான மதிப்பே தனி தான். இன்றுவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் புதிய வெர்ஷன் அறிமுகமாகுமுன்பே அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு காத்திருப்பதும், வெளியான அன்றே அந்த போன்களை வாங்கிப் பெருமையடிப்பதும், ஐபோன்களைப் பயன்படுத்துவதை ஸ்டேட்டஸ் தொடர்பான விஷயமாகப் பார்ப்பதும் தொடர்கிறது. காலத்திற்கேற்ப தங்களது தரத்தையும் வடிவமைப்பையும் மாற்றிக்கொண்டு சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளும் சாமர்த்தியத்தின் பரிசாகவே இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை ஆப்பிள் நிறுவனம் வென்றுள்ளது என்றால் மிகையாகாது.