அரசாங்க ஹெலிகாப்டரை பயன்படுத்திய விவகாரம் - இம்ரான் கானுக்கு சம்மன்

அரசாங்க ஹெலிகாப்டரை தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், வருகிற 11-ம் தேதியில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இஸ்லாமபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில், மிக எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, பிற நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்க ஹெலிகாப்டரை தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக இம்ரான் கானுக்கு அந்நாட்டுத் தேசிய அக்கவுண்டபிலிட்டி பியூரோ சம்மன் அனுப்பியுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்த்துங்வா மாகாணத்தில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்கிறது. இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது அரசாங்கத்தின் ஹெலிகாப்டரை இம்ரான் தவறுதலாகப் பயன்படுத்தினார் என்றும் இதனால், அரசாங்கத்துக்கு 2.17 மில்லியன் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 18-ம் தேதியன்று இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இதற்கு, `தேர்தல் வேலைகளில் இம்ரான் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை தொடர்பாக விளக்கம் அளிப்பார்' என்று அவரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுத்தேர்தல் முடிவடைந்ததையடுத்து வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம்முன் இம்ரான் ஆஜர் ஆக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!