``நல்ல பிரதமராகவும், அம்மாவாகவும் இருப்பேன்!" - நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் | "I will be a good Prime Minister and a Mom too" says New Zealand Prime Minister Jacinda Ardern

வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (05/08/2018)

கடைசி தொடர்பு:20:18 (05/08/2018)

``நல்ல பிரதமராகவும், அம்மாவாகவும் இருப்பேன்!" - நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன்

``நல்ல பிரதமராகவும், அம்மாவாகவும் இருப்பேன்!

நியூஸிலாந்து நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன், மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் தன் பணிகளைத் தொடரப்போவதாக அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். உலகளவில், பிரதமர் பதவியில் இருக்கும்போதே குழந்தையை ஈன்றெடுத்த இரண்டாவது பெண் அர்டர்ன். இதற்குமுன், 1990-ம் ஆண்டு, பாகிஸ்தான் பிரதமரான பெனாசீர் பூட்டோ பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றார்.

ஜெசிண்டா அர்டர்ன்

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே, அர்டர்ன் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், ஆறு வாரங்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தார் அர்டர்ன். ஜூன் 21-ம் நாள், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். தன் கணவர் க்ளார்க் கேஃபோர்ட் மற்றும் குழந்தையுடன் இணைந்து `க்ளிக்' செய்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து, தனது சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார். குழந்தைக்கு `நீவ்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தை பிறந்து இரண்டு வாரங்களான நிலையில், விடுப்பு முடிந்து வியாழன் அன்று மீண்டும் பணிகளைத் தொடங்கினார் அர்டர்ன். விடுப்பு நாள்களில், துணை பிரதமரான வின்ஸ்டன் பீட்டர் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து ``நியூசிலாந்து மக்களுக்கும் துணை பிரதமர் மற்றும் குழுவுக்கும் நன்றி. விடுப்பு முடிந்து அலுவலகம் செல்ல நான் தயாராக இருக்கிறேன். என் வேலைக்காக என் குழந்தையையோ, வீட்டுக்காக அலுவலகத்தையோ நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டேன். என் வாழ்நாளிலேயே வேகமாகக் கடந்த ஆறு வாரங்கள் இவைதான். பெற்றோர் பொறுப்புகளுடன், சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வாழும் நாட்டையும் கவனித்துக்கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. நீவ் மிகவும் சிறியவள். அவளுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதிலிருக்கும் பதற்றம் எப்போதும் எனக்குள் இருக்கும். கூடவே என் கடமைகளைத் தவறாமல், எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிவேன். உங்கள் எல்லாருடைய உறுதுணையும் இருந்தால், நிச்சயம் என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நம்புகிறேன்.

ஜெசிண்டா அர்டர்ன்

என் கணவர், முழு நேரமும் வீட்டில் இருந்தபடி குழந்தையைப் பார்த்துக்கொள்வார். அவர் வீட்டிலிருந்து பார்த்துக்கொள்ளும் ஒரு பெற்றோர்தானே தவிர, `பேபிசிட்டர் (Babysitter)' அல்ல. நான் ஒரு நல்ல பிரதமராகவும் அம்மாவாகவும் சிறப்பாக என் பணியைத் தொடருவேன். இதனால் எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும், தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் வீட்டையோ அல்லது வேலையையோ தியாகம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். நிச்சயம் ஒருநாள் இந்தக் குழப்பமான நிலைமை மாறும். பெண்கள் அவர்களுக்கான விருப்பத்தைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, வீடு மற்றும் அலுவலகம் இரண்டிலும் சிறப்பாக விளங்குவார்கள் என நம்புகிறேன். சொல்லப்போனால், நீவ் வந்த பிறகுதான் பெரும்பாலான பெண்கள் ஏன் அலுவலகத்துக்குச் செல்ல முடிவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று தன் அளவில்லா ஆனந்தத்தைப் பகிர்ந்துகொண்டார் ஜெசிண்டா.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் தந்தையோடு இனிமேல் அவ்வப்போது தென்படும் தன் குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நள்ளிரவில் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார் ஜெசிண்டா அர்டர்ன். தன் கணவர் கேஃபோர்ட் மற்றும் குழந்தை நீவுடன் இணைந்து அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்