வெளியிடப்பட்ட நேரம்: 03:59 (06/08/2018)

கடைசி தொடர்பு:07:15 (06/08/2018)

பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு; சுனாமி எச்சரிக்கை வாபஸ்..!

நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் அடிக்கடி லேசான நிலநடுக்கமும், பூகம்பமும் நிகழ்ந்து விடுவது தொடர்ந்தபடியே இருக்கிறது.

சுனாமி ஆபத்து நீங்கியதால், இந்தோனேசியா அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. இந்தோனேசியாவின் லம்பாக் தீவின் அருகே, நேற்று மாலை 7 ரிக்டர் அளவுகோலில், திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டுமக்களுக்கு இந்தோனேசியா அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் அடிக்கடி லேசான நிலநடுக்கமும், பூகம்பமும் நிகழ்ந்து விடுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆழ்கடலில் ஏற்பட்ட பூகம்பம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்திலும் எதிரொலித்து, பலநூறு உயிர்களைப் பறித்துக்கொண்டது. நேற்றைய தினமும், சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் தீவின் அருகேதான் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ரிக்டரில் இந்த நிலநடுக்கத்தின் அளவுகோல் 7 ஆக பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின. பொதுமக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

அந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின்னர், நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்து, அரசு அறிவிப்பு வெளியிட்டது. சுனாமி அறிவிப்பு வெளியானதால், மக்கள் இன்னும் பீதியில் மூழ்கினர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பின், 'சுனாமி ஆபத்து நீங்கியது' என்று இந்தோனேசிய அரசு வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களை ஓரளவு பழைய நிலைக்கு திருப்பியுள்ளது. மேலும், ``பாலி மற்றும் லம்பாக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வழக்கம்போல் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மக்கள் அஞ்சத் தேவையில்லை" என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 30-ம்தேதி, தென் மேற்குப் பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், அதிகாலையில் இதேபோல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால், 'பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கடியில் சுமார் 300 கி.மீ ஆழத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது' என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அப்போது அறிவித்தது. தற்போது, இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ள பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் அதை விடக் கூடுதலான 7- ஐத் தொட்டுள்ளதுதான் அந்தநாட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.