வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (06/08/2018)

கடைசி தொடர்பு:17:15 (06/08/2018)

பயங்கர நிலநடுக்கம், உயரும் பலி எண்ணிக்கை! -இந்தோனேசியாவில் மீட்புப் பணி தீவிரம்

இந்தோனேசிய லம்போக் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தோனேசியா

தீவுகள் சூழ்ந்த நாடான இந்தோனேசியாவில், நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பாலி மற்றும் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியது. இதனால், மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில் பெருமளவில் கூடினர். 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. மலைப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து,  இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 20-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்தோனேசியா

முன்னதாக, கட்டட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று காலை வெளியான தகவலில், உயிரிழப்பின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை 91 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

இதனிடையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.